Archive

Archive for 9,December, 2012

கன்னியாகுமரி கடைகளில் விற்பனைக்காக வைத்த கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை-தினத்தந்தி செய்தி

9,December, 2012 Comments off

கன்னியாகுமரி கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த கெட்டுப்போன இறைச்சிகளை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொற்றுநோய் ஆபத்து

கன்னியாகுமரியில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் ஆகும். இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கன்னியாகுமரிக்கு வந்து செல்கின்றனர். இந்த சீசனையொட்டி சாலையோரங்களில் புற்றீசல் போல சீசன்கடைகள் முளைத்துள்ளன. அந்த கடைகளில் இட்லி, எண்ணெய் பலகாரம் போன்ற உணவுப்பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகின்றன.

குறிப்பாக சில கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் உணவுப்பண்டங்கள் மூடிவைக்காமல் திறந்து வைத்துள்ளனர். இதனால் அந்த உணவுகள் மீது ஈ மற்றும் கொசுக்கள் மொய்த்து சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது. இதனால் தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்து கொண்டிருந்தன.

உணவுப்பண்டங்கள் பறிமுதல்

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவின் பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சாலோடீசன், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அஜய்குமார், சிதம்பரதாணுபிள்ளை, அய்யப்பன், முருகேசன், கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார அதிகாரி முகைதீன்பிச்சை ஆகியோர் அடங்கிய குழுவினர் கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல், கடைகள், தங்கும் விடுதி உணவகங்கள் மற்றும் சீசன் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது கெட்டுப்போன ஆடு, மாடு, கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட காலாவதியான மாவு, பேரீச்சம்பழம், இனிப்பு வகைகள், கேக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பொருட்கள் அனைத்தையும் கடற்கரைக்கு எடுத்துச்சென்று புதைத்தனர்.

Categories: NEWS