Archive

Archive for 10,December, 2012

உணவுப்பொருள் நிறுவனங்கள் உரிமத்தை பதிவுசெய்ய அழைப்பு பிப்.4 கடைசி தேதி-தினகரன் செய்தி

10,December, 2012 Comments off

விருதுநகர், : உணவுப்பொருள் விற்பனையாளர்கள் தங்களது விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களை வருகிற பிப்ரவரி 4ம் தேதிக்குள் பதிவுசெய்து, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ஹரிஹரன் தகவல்: உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி உணவுப்பொருள் விற்பனையாளர்கள், டீக்கடை, ஓட்டல்கள், பேக்கரி தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்கள், மளிகைக் கடைகள், குளிர்பான தயாரிப்பு, விற்பனை நிறுவனங்கள், பாட்டில்களில் குடிநீர் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், தனியார் மதுபான பார் நடத்துவோர் தங்களது நிறுவனங்களை சம்மந்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகி பதிவுசெய்து,  உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
2013ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதிக்குள் அனைத்து உணவுப்பொருள் நிறுவனங்களும் பதிவு செய்து உரிமம் பெறவேண்டும். ஆண்டு விற்று வரவு ரூ.12 லட்சத்திற்குள் இருந்தால் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் படிவம் “அ“ பெற்று ரூ.100 பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும். ஆண்டுக்கு ரூ.12 லட்சத்திற்குமேல் விற்றுவரவு செய்யும் விற்பனை நிறுவனங்கள், விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் படிவம் “ஆ“ பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். நாளொன்று விற்பனையை பொறுத்து ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வரை உரிம கட்டணம் செலுத்தி லைசென்ஸ் பெற வேண் டும். மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மொத்தம் 18 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பித்த தேதியிலிருந்து பரிசீலித்து உரிமம் வழங்க 60 நாட்கள் வரை அவகாசம் தேவைப்படுகிறது. கடைசி நேரத்தில் விண்ணப்பம் செய்வதால் அனைத்து விண்ணப்பங்களையும் ஒரே நேரத்தில் பரிசீலிக்க ஏற்படும் சிர மத்தை தவிர்க்க, தற்போதே விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மஞ்சூரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு-தினமலர் செய்தி

10,December, 2012 Comments off

மஞ்சூர் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மஞ்சூர் பஜாரில் உணவகங்கள், மளிகை கடை, இறைச்சி கடை, பெட்டி கடை என நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளில் தரமில்லாத உணவு பண்டங்கள், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் ரவி தலைமையிலான உணவு பாதுகாப்பு குழுவினர், மஞ்சூர் பஜாரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உணவகங்களில் ஆய்வு செய்த அதிகாரிகள் உணவு பொருட்கள், அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருள்களை ஆய்வு செய்தனர். கெட்டு போன பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
தேநீர் கடைகளில் வைக்கப்பட்டிருந்த காலாவதியான குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், கலப்பட தேயிலை தூள் மற்றும் தர மற்ற பண்டங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்த போதே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
"இதன் மூலம் மஞ்சூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகளவில் தரமில்லாத உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது ஊர்ஜிதமானது,’ என அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
"வரும் நாட்களில், இதேபோல் செயல்பட்டால் கடையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்; தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் குறித்து பொதுமக்கள், ஊட்டியில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் ,’ எனவும் அறிவுறுத்தி சென்றனர்.

Categories: NEWS