Home > Coimbatore, DISTRICT-NEWS > ஆவின் பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி பொதுமக்கள் அதிர்ச்சி

ஆவின் பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி பொதுமக்கள் அதிர்ச்சி

31,August, 2015

 

கோவை
கோவையில் ஆவின் பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி
கோவை மரக்கடை தியாகராஜ புதுவீதியில் மளிகை கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் ஆவின் பால் முகவர்கள் மூலமாக தினமும் காலை, மாலையில் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல ஆவின் பால் முகவர் அந்த மளிகை கடைக்கு பால் பாக்கெட்டுகளை கொடுத்து விட்டு சென்றார்.
இந்த பால் பாக்கெட்டுகள் 28.8.2015 என தேதியிட்டு சீல் வைக்கப்பட்டிருந்தன. இதில் அரை லிட்டர் பால் பாக்கெட்டை ஒருவர் வாங்கினார். அந்த பால் பாக்கெட்டிற்குள் ஏதோ மிதப்பது போல தெரிந்தது. உடனே அவர் கடைக்காரரிடம் கொடுத்து பாக்கெட்டில் ஏதோ மிதக்கிறது என்று கூறியுள்ளார்.
அதை ஊற்று பார்த்த போது, பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி மிதப்பது இருந்தது. இது குறித்து கடைக்காரர் பாலை வினியோகித்த முகவரிடம் புகார் தெரிவித்தார்.
பொதுமக்கள் அதிர்ச்சி
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:–
கோவையில் சமீப காலமாக ஆவின் பால் தொடர்பாக பல்வேறு புகார்கள் வருகின்றன. சில மாதங் களுக்கு முன்பு தடாகம் சாலையில் வினியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டு போயிருந்தன. ஒரு பாக்கெட்டில் புழு இருந்தது. ஒரு ஆவின் பூத்தில் வாங்கிய பால் கோவா கெட்டுப்போனதாக உணவு பாதுகாப்பு துறையிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் பால் கோவா ஆகியவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி ஒன்று கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரப்பான் பூச்சி இருப்பதை பார்க்காமல் பாலை குடித்திருந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும்.
எனவே ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு வினியோகிக்கும் பாலை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஆய்வு
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘ஆவின் பால் பாக்கெட்டில் கரப்பான் பூச்சி விழுந்தது பற்றி புகார் வந்துள்ளது. அதன் மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது பற்றி விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS
  1. 31,August, 2015 at 7:23 pm

    பாக்கெட்டில் கரப்பான் பூச்சி தான் என உள்ளது தெளிவாக தெரிகிறது. இதை ஏன் ஆய்வுக்கு அனுப்பி உறுதி செய்ய வேண்டும்.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: