Home > DISTRICT-NEWS, Erode > ஜி.ஹெச்., முன்பு தள்ளுவண்டி கடைகள் அகற்றம்: பஸ் ஸ்டாண்டில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

ஜி.ஹெச்., முன்பு தள்ளுவண்டி கடைகள் அகற்றம்: பஸ் ஸ்டாண்டில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

2,September, 2015

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில், உணவு பொருட்களை விற்பனை செய்த, தள்ளுவண்டி கடைகள், அங்கிருந்து அகற்றப்பட்டன.

ஈரோடு மாநகரின் பன்னீர் செல்வம் பார்க், மூலப்பாளையம், கொல்லம் பாளையம், பிரப் ரோடு மற்றும் வ.உ.சி., பூங்கா என்று பல்வேறு பகுதிகளில், திறந்தவெளியில் உணவகங்கள் நடத்தி, உணவுப்பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்தி, அப்புறப்படுத்தினாலும், சில நாட்களில் மீண்டும் கடை போடுகின்றனர்.

இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் உரிய லைசென்ஸ் இன்றி, ஏராளமான சிறு வியாபாரிகள், சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் விதமாக, உணவு பண்டங்களை விற்பனை செய்து வருகின்றனர். தலைமை அரசு மருத்துவமனை முன்பே, திறந்த வெளியில், உணவுப்பண்டங்களை வைத்து தள்ளுவண்டி வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். அவர்களை வேறு இடத்துக்கு செல்லுமாறு கூறப்பட்டது. தொடர்ந்து, ரயில்வே ஸ்டேஷனில் மூன்று கடைகள், பஸ் ஸ்டாண்டில், ஐந்து கடைகளில், அதிகளவில் சாய நிறமிகள் கலக்கப்பட்ட திண்பண்டங்களை விற்பனை செய்த, ஐந்து நிறுவனங்களில் இருந்து உணவுப்பண்டங்கள் மற்றும் பான்பராக் உள்பட, 5,000 ரூபாய் மதிப்புள்ள, காலாவதியான மற்றும் சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுபோன்ற, சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை தயாரித்து, விற்பனை செய்யும், உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகள் மீது, தொடர்ந்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Erode
%d bloggers like this: