Home > Coimbatore, DISTRICT-NEWS > 27 மாணவர்கள் வாந்தி பேதி எதிரொலி: அரசு பள்ளியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு பெற்றோர் முற்றுகையால் பரபரப்பு

27 மாணவர்கள் வாந்தி பேதி எதிரொலி: அரசு பள்ளியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு பெற்றோர் முற்றுகையால் பரபரப்பு

25,September, 2015

பொள்ளாச்சி
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு வாந்திபேதி ஏற்பட்டதை தொடர்ந்து சுகாதார துறையினர் பள்ளியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 மாணவர்களுக்கு வாந்திபேதி
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோமங்கலம் புதூர் ஊராட்சியில் தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 43 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மதியம் மாணவ-மாணவிகளுக்கு முட்டையுடன் புளி சாதமும் வழங்கப்பட்டு உள்ளது. இதை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மாணவ-மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்து உள்ளனர்.
இதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி மாணவ-மாணவிகளுக்கு ஓமபொடி கலந்த குடிநீரை கொடுத்து உள்ளார். பின்னர் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டு உள்ளனர். வீட்டிலும் மாணவ-மாணவிகளுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதால் பதறி போன பெற்றோர்கள் அவர்களை மீட்டு கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்காக 27 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்ததும் அவர்கள் அனைவரும் வீடு திரும்பினார்கள்.
சுகாதார துறையினர் ஆய்வு
இந்த நிலையில் நேற்று காலை வட்டார மருத்துவ அலுவலர் பிரவீன்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில், சுகாதார மேற்பார்வையாளர் சக்தி, ஆய்வாளர் மோகன், கிராம செவிலியர் கலாமணி ஆகியோர் பள்ளிக்கூடத்திற்கு வந்து இருந்தனர். அவர்கள் அங்குள்ள குடிநீர் தொட்டி சுத்தமாக இருக்கிறதா? என்று ஆய்வு நடத்தினர்.
பின்னர் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட முட்டை அழுகி இருந்ததா? மேலும் அங்கு உணவு தயாரிக்க வைக்கப்பட்டு இருந்த உணவுகள் தரமானதா? என்பதை அறிய அவற்றின் உணவு மாதிரிகளையும் சேகரித்தனர்.பள்ளிக்கூடத்திற்கு சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்ய வந்ததை அறிந்த பெற்றோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் சுகாதாரத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். பின்னர் சாலை மறியலுக்கு முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது:-
வேதனை
பள்ளிக்கூடத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமானதாக இருக்க வேண்டும். உணவு பொருட்கள் தரம் இல்லாததால் தான் தங்கள் குழந்தைகளுக்கு வாந்திபேதி ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து இதுவரை கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்ததாது வேதனை அளிக்கிறது. மாணவர்களுக்கு சாப்பாடு வழங்கும் முன் அது தரமானதா என்பதை ஆசிரியர் சாப்பிட்டு பார்த்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS
%d bloggers like this: