Home > DISTRICT-NEWS, Salem > உணவு பாதுகாப்பு அதிகாரியை சமாதானப்படுத்த முயற்சி

உணவு பாதுகாப்பு அதிகாரியை சமாதானப்படுத்த முயற்சி

26,September, 2015

சேலம்: சேலத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த, வின் ஸ்டார் இந்தியா நிறுவன அதிபர் தலைமறைவாகி விட்டார். அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், ஆதரவு வக்கீல்களும், நேற்று, அதிகாரியின் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேலம் மாவட்டத்தில், வின் ஸ்டார் இந்தியா நிறுவனம் சார்பில், நெல்லிக்காய் ஜூஸ், கற்றாழை ஜூஸ் ஆகியவை பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதற்கான ஆலை, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில், ‘ஏ1 அக்ரோ புட்ஸ்’ என்ற பெயரில் உள்ளது. அந்நிறுவனம் விற்பனை செய்யும் ஜூஸில், ரசாயனம் அதிகம் கலந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. அதையடுத்து, மாவட்டம் முழுவதும், ஜூஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், வின் ஸ்டார் இந்தியா நிறுவனத்துக்கான, ‘டிவி’யில் நேரடி நிகழ்ச்சி ஒன்றில், தடை போட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவை, அதன் நிறுவனரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சிவகுமார், தகாத வார்த்தைகளிலும், அநாகரீகமாகவும், பேசியதாக தெரிகிறது. அதேபோல், அவர் அலுவலகத்தில் இருந்தபோது, சிவகுமாரும், அவருடைய உதவியாளர் சுரேஷ் என்பவரும், மொபைலில் தொடர்பு கொண்டு, பெண் என்றும் பாராமல் ஆபாசமாக பேசியுள்ளனர். அதையடுத்து, கலெக்டரிடம் தகவல் தெரிவித்த அனுராதா, போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தார். இந்த தகவல் தெரியவந்ததும், சிவகுமார் தலைமறைவாகி விட்டார். அவருடைய உதவியாளர்கள், நான்கு பேரை பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர். தலைமறைவான சிவகுமாரை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிவக்குமார் நிறுவனத்தை சேர்ந்த சிலரும், அவரது வக்கீல்களும், உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.

உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது: வின் ஸ்டார் நிறுவனம் விற்பனை செய்யும், ஜூஸ்களில் ரசாயனம் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. கடந்த, 14ம் தேதி, மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு தடை போட்டேன். 30ம் தேதிக்குள், நச்சுத்தன்மை இல்லையென்பதை உறுதி செய்யும் வகையில் ஜூஸ் கொண்டு வரவேண்டும். அது ஆய்வில் சரியானது என தெரியவந்தால், விற்பனைக்கு அனுமதிப்பேன் என, கூறியுள்ளேன். அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனத்தில் கூறி, இரண்டு தனியார், ‘டிவி’களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட விளம்பரத்தை நிறுத்துமாறு கூறியுள்ளேன். அந்நிறுவனத்தினர் நேரில் வந்து பேசினர். தரமான பானமாக இருந்தால் மட்டுமே விற்பனைக்கு அனுமதிப்பேன் என, கூறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்குகளை கவனிக்க அரசு வக்கீல் நியமனம்: சேலம், சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில், உணவு மாதிரிகளை ஆய்வு செய்யும் பகுப்பாய்வுக் கூடம் உள்ளது. தற்போது, உணவு பாதுகாப்பு அலுவலருக்கு உதவியாக, அது தொடர்பான வழக்குகளை நடத்த, அரசு வக்கீல் ஒருவர் வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டத்துக்கான அரசு வக்கீலாக, திருப்பூரைச் சேர்ந்த ரேவதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சேலம் உடையாப்பட்டியில் உள்ள பகுப்பாய்வு கூடத்தில், தனி அலுவலகம் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

Categories: DISTRICT-NEWS, Salem
%d bloggers like this: