Home > DISTRICT-NEWS, Erode > புரோட்டா கடை உரிமையாளருக்கு 6 மாதம் ஜெயில் ஈரோடு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

புரோட்டா கடை உரிமையாளருக்கு 6 மாதம் ஜெயில் ஈரோடு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

18,December, 2015

கலப்பட உப்பு பயன் படுத்தியதாக புரோட்டா கடை உரிமையாளருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
கலப்பட உப்பு
ஈரோடு பெருந்துறை ரோட்டில் கொங்கு புரோட்டா ஸ்டால் என்ற கடை உள்ளது. இங்கு கடந்த 21-11-2007 அன்று ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஈரோடு நகர உணவு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது புரோட்டா கடையில் உணவில் சேர்க்கப்பட்ட பல பொருட்கள் சேகரிக்கப்பட்டு சென்னை உணவுப்பொருள் பகுப்பாய்வு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
அதில் கடையில் உணவுப்பொருட்களில் சேர்க்கப்பட்டு வந்த உப்பில் போதிய சோடியம் மற்றும் அயோடின் இல்லாமல் இருந்ததும், அது கலப்பட உப்பு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆய்வக சான்றிதழ் பெற்ற உணவு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், சென்னை, மாநில உணவு பாதுகாப்பு துணை இயக்குனர் அனுமதியின் பேரில் சம்பந்தப்பட்ட புரோட்டா கடை உரிமையாளர் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்தார்.
6 மாதம் ஜெயில்
மேலும் இதுகுறித்து ஈரோடு 1-ம் எண் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு அருண் சபாபதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட கொங்கு புரோட்டா ஸ்டால் உரிமையாளர் விஜயகுமாருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவ றினால் கூடுதலாக ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் மாஜிஸ்திரேட்டு அருண் சபாபதி கூறி இருந்தார். இந்த வழக்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அரசு வக்கீல் கண்ணன் ஆஜர் ஆனார்.

Categories: DISTRICT-NEWS, Erode
%d bloggers like this: