Home > NEWS > உணவுகளின் தரத்தை ஆய்வுசெய்ய ஆட்சியர் உத்தரவு

உணவுகளின் தரத்தை ஆய்வுசெய்ய ஆட்சியர் உத்தரவு

30,December, 2015

உணவு விடுதிகளில் உணவுகளின் தரம் குறித்து  உணவுப் பாதுகாப்பு அலுவலர் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்புக்குழு இரண்டாவது அரையாண்டு கூட்டம் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான நான்காவது காலாண்டு கூட்டம் ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அகில இந்திய பாதுகாப்புக் குழு இயக்கம் மற்றும் குளோபல் சமூகநல பாதுகாப்பு இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து ஆட்சியர் கூறியது:

கரூர் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் அவ்வப்போது ஆய்வுமேற்கொண்டு உணவு மாதிரிகள், உணவு எண்ணெய் மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பி, தரத்தை உறுதிசெய்ய வேண்டும்.

ஆய்வு முடிவில் தரம் குறைந்த உணவு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது மாவட்ட தீர்ப்பு அலுவலர் மூலம் குற்ற முறையீடு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆற்றின் கரையோர பகுதிகளிலுள்ள கழிவுநீரில் தனியார் நிறுவனங்கள் ஆடைகளை சலவைசெய்து வருவதால், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நிலையை கருத்தில் கொண்டு, ஆற்றுப் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மூலம் ஆய்வுமேற்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கரூரில் போக்குவரத்து நெருக்கடியை முற்றிலும் தவிர்க்கும் விதமாக கரூர் பேருந்து நிலையம் முதல் கோவை சாலை வரை உள்ள மையத்தடுப்புகளை நீக்கிவிட்டு 2015-16-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், கான்கிரீட் தூண்கள் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் அமைக்கப்படவுள்ளன என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா, அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்புக் குழு மண்டல தலைவர் எஸ். கோபாலன், குளோபல் சமூகநல பாதுகாப்பு இயக்கத் தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் விமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Categories: NEWS
%d bloggers like this: