Home > DISTRICT-NEWS, Karur > உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்: நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் அறிவுரை

உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்: நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் அறிவுரை

6,January, 2016

கரூர்: உணவு, வணிக கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு உணவு தரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்புக்குழு, இரண்டாவது அரையாண்டு கூட்டம் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான, நான்காவது காலாண்டு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது: கரூர் மாவட்டத்திலுள்ள உணவகங்களிலுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் உணவு பாதுகாப்பு அலுவலர் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு உணவு மாதிரிகள், உணவு எண்ணெய் மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பி தரத்தை உறுதி செய்ய வேண்டும். ஆய்வு முடிவில் தரம் குறைந்த உணவு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து சுகாதாரத்துறையும், உணவு பாதுகாப்புத்துறையும் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மோட்டார் வாகன விதிமுறைகளை கடைபிடித்து டூவீலர்களில் நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்த வேண்டும். நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்க் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு, கழிவுநீர் குழாய் முறைப்படுத்துதல் போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் வீடு கட்ட அனுமதி வழங்கும் போது சரியாக பின்பற்றுவதுடன், ஒன்று முதல், 48வது வார்டு வரை நடப்பட்ட, 720 மரக்கன்றுகளை அந்தந்த நகராட்சி கவுன்சிலர்கள் மூலம் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கழிவு நீரில் தனியார் நிறுவனங்கள் ஆடைகள் சலவை செய்து வருவதாகவும், அதை மேலும் மக்கள் பயன்படுத்துவதாகவும், அதனால், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜெயந்தி பேசினார். இதில், டி.ஆர்.ஓ., அருணா, அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்புக்குழு மண்டல தலைவர் கோபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தரமான உணவு விற்பனையா? கரூர் மாவட்ட நகர பகுதிகளில், தெருவுக்குத் தெரு சாலையோரம் இரவு டிபன் கடைகள் இயங்கி வருகிறது. இவற்றில் சுகாதாராம் இருக்கிறதா, அவர்கள் என்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறிதான். இந்த உணவுகளின் தரம் குறித்து சுகாதாரத்துறையும், உணவு பாதுகாப்புத்துறையும் கண்காணிப்பதில்லை. அவ்வாறே கண்டு கொண்டாலும், சடங்குக்காக ஒருசில வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. தொடர் கண்காணிப்பு இல்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.

Categories: DISTRICT-NEWS, Karur
%d bloggers like this: