Home > DISTRICT-NEWS, Tiruchirappalli > 200 கிலோ போலி துவரம் பருப்பு: முசிறி அருகே வீட்டில் பறிமுதல் –

200 கிலோ போலி துவரம் பருப்பு: முசிறி அருகே வீட்டில் பறிமுதல் –

12,January, 2016

Tamil_DailyNews_7820659875870

தா.பேட்டை: திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தண்டலை கிராமத்தில் கேசரி பருப்பை பதுக்கி வைத்து அவற்றை துவரம் பருப்பு என கூறி அதிக  விலைக்கு விற்பதாக அதிகாரிகளுக்கு  ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, முசிறி தாசில்தார் வாசுதேவன் தலைமையில் வருவாய்த்  துறையினர் நேற்று காலை அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தண்டலையை சேர்ந்த மாரியாயி (60) என்பவர் விற்பனை செய்வதற்காக தனது  வீட்டில் 200 கிலோ கேசரி பருப்பை பதுக்கிவைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள்  முத்துகுமாரசாமி, அழகுபாண்டியன் ஆகியோர்  அந்த பருப்பை ஆய்வு செய்தபோது, அது வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  போலியான துவரம் பருப்பு. இதன் உண்மையான பெயர் கேசரி பருப்பு என தெரியவந்தது. கிலோ ரூ.60 விலையுள்ள கேசரி பருப்பை வாங்கி  அவற்றை துவரம் பருப்பு என கூறி ரூ.160க்கு விற்பனை செய்து வந்தது  விசாரணையில் தெரியவந்தது.
சந்தைகள் மற்றும் கிராமங்களில் இவற்றை விற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பருப்பின் மாதிரி  மதுரையில் உள்ள ஆய்வகத்துக்கு  பகுப்பாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உணவு  பாதுகாப்பு அலுவலர் முத்துகுமாரசாமி கூறுகையில், தரம் குறைந்த கெமிக்கல் சேர்க்கப்பட்ட துவரம் பருப்பை போன்று தோற்றத்தை தரும் கேசரி  பருப்பு விற்பனைக்கு வந்துள்ளது.
விலை குறைவாக விற்கப்படும் இந்த போலி துவரம் பருப்பை வாங்கி உணவுப் பொருட்களுடன் சேர்த்து சமைத்து உண்டால் முடக்குவாதம்,  நரம்பியல்  சம்பந்தமான நோய் ஏற்படும். எனவே பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட  பருப்பின் ரிசல்ட் வந்ததும் அதை பதுக்கி வைத்திருந்த மாரியாயி மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என அதிகாரிகள் தெரிவித்தனர். –

%d bloggers like this: