Home > NEWS > மாகி நூடுல்ஸ் விவகாரம்: மைசூர் ஆய்வகத்திடம் ஆய்வறிக்கையை கேட்டது உச்ச நீதிமன்றம்

மாகி நூடுல்ஸ் விவகாரம்: மைசூர் ஆய்வகத்திடம் ஆய்வறிக்கையை கேட்டது உச்ச நீதிமன்றம்

14,January, 2016

மாகி நூடுல்ஸின் சோதனையில் கூடுதல் விளக்கம் பெற மேலும் ஒரு ஆய்வறிக்கையை மைசூரில் உள்ள அரசு ஆய்வகத்திடம் உச்ச நீதிமன்றம் நேற்று கேட்டுள்ளது. மாகி நூடுல்ஸில் குளுடாமிக் அமிலத்தன்மை அனுமதிக்கப்பட்ட அளவிற்குள் இருக்கிறதா என்பது பற்றி ஆய்வறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கு முன் மாகி நூடுல்ஸில் மோனோ சோடியம் குளுட்டாமைட் அளவை சோதனை செய்து ஆய்வு அறிக்கையை மைசூர் ஆய்வுக்கூடம் உச்சநீதிமன்றத்தில் சமர்பித்த பிறகு மேலும் இதில் கூடுதல் விளக்கம் வேண்டும் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு இந்த உத்தரவை விதித்துள்ளது.

உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி மாகி நூடுல்ஸில் வேதிப் பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவோடுதான் இருக்கின்றன என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் மற்ற அனைத்து அளவுகோல்களையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியது.

மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் இரண்டு வழிமுறைகளில் சோதனையை மேற்கொள்ள வேண்டும். மாகி நூடுல்ஸில் குளுட்டாமிக் அமிலம் அனுமதிக்கப்பட்ட அளவுகளில் இருக்கிறதா என்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த அளவுகோல்கள் இருக்கிறதா என்றும் ஆய்வறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்தார்.

மேலும் குளுட்டாமிக் அமில சோதனையை பற்றி விளக்கம் அளிக்கவேண்டும். இதற்கு கூடுதலாக மாகி மாதிரிகள் தேவைப்பட்டால் தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு சமரச தீர்ப்பாயத்தின் கூடுதல் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் ஆணையர் மூலம் அந்த மாதிரிகளை லக்னோவில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடமிருந்து பெற்றுத்தருவார் என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. அனைத்து செயல்முறைகளையும் எட்டு வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும் ஆய்வறிக்கை ஏப்ரல் 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Categories: NEWS
%d bloggers like this: