Home > DISTRICT-NEWS, Salem > 2,650 மூட்டை கெட்டுப்போன வெல்லம் விடுவிப்பு: காலாவதியானவை மக்களின் பயன்பாட்டுக்கு வரும் அபாயம்

2,650 மூட்டை கெட்டுப்போன வெல்லம் விடுவிப்பு: காலாவதியானவை மக்களின் பயன்பாட்டுக்கு வரும் அபாயம்

31,January, 2016

img780

சேலம்: சேலம், வெல்ல மார்க்கெட்டில், 7 மாதங்களுக்கு முன் பறிமுதல் செய்யப்பட்ட, 2,650 மூட்டை வெல்லத்தை, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விடுவித்தது, வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெட்டுபோய் பயன்படுத்த முடியாத இந்த வெல்லம் அனைத்தும், மக்களின் பயன்பாட்டுக்கு வரும் அபாயம் உருவாகியுள்ளது.

சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தியாகும் வெல்லம் அனைத்தும், சேலம் வெல்ல மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும். இங்கு வியாபாரிகள் ஏலம் மூலம் இவற்றை கொள்முதல் செய்வது வழக்கம். கடந்த, 2015, மே மற்றும் ஜூன் மாதத்தில், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா திடீர் ஆய்வு நடத்தினார். இதில், சர்க்கரை கலப்படம் செய்த, 2,650 வெல்ல மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை மறு உத்தரவு வரும் வரை, விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறைப்படி, உற்பத்தியாளர் சங்கத்தின் பொறுப்பிலேயே இவை ஒப்படைக்கப்பட்டது. இவை வெல்ல மார்க்கெட்டில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

7 மாதத்துக்கு பின்…: பறிமுதல் செய்து, ஏழு மாதம் ஆகிவிட்ட நிலையில், வெயிலில் உருகியும், பனியில் மீண்டும் குளிர்ந்தும் என, அந்த வெல்லம் அனைத்தும் பயன்படுத்த முடியாத அளவுக்கு கெட்டுப்போனது. இந்நிலையில், திடீரென உற்பத்தியாளர்கள் மூட்டைக்கு, 150 ரூபாய் கொடுத்துவிட்டு எடுத்துக்கொள்ள உணவுப்பாதுகாப்பு அலுவலர் அனுராதா உத்தரவிட்டு விட்டதாக கூறி, கடந்த ஜனவரி, 28 ம் தேதியன்று, அந்த வெல்லங்களை சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் எடுத்துச் சென்றனர். இவை குறைந்த விலைக்கு மீண்டும் வியாபாரிகளிடம் சென்று, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால், வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காலாவதியான வெல்லம்: இதுகுறித்து வெல்லம் வியாபாரி ஒருவர் கூறியதாவது: வெல்லத்தில் சர்க்கரை கலந்தததால், மக்களின் உடல்நலத்துக்கு கேடுவிளையும் எனக்கூறி வெல்லத்தை பறிமுதல் செய்தனர். ஏழு மாதங்களுக்கு பின், அவை கெட்டுப்போன நிலையில், மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அப்படியெனில், அந்த வெல்லம் மக்களின் உடல்நலத்துக்கு கேடு ஏற்படுத்தாதா. பறிமுதல் செய்த போது இருந்ததை விட, பல மடங்கு கெடுதல் தன்மை கொண்டுள்ளது. அவற்றுக்கு, மூட்டைக்கு ,150 ரூபாய் வாங்கிக்கொண்டு திரும்ப கொடுப்பதால், கெடுதலை ஏற்படுத்தாமல் இருக்குமா. காலாவதியான பொருட்களை வாங்கி அழிக்க வேண்டிய, உணவு பாதுகாப்பு அலுவலரே, காலாவதியான வெல்லம் விற்பனைக்கு அனுமதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

‘வெல்லம் மார்க்கெட்டில் இருக்க வேண்டும்’: இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, மொபைலில் தொடர்பு கொண்ட போது, அவர் கூறியதாவது: சர்க்கரை கலந்த வெல்லத்தை பறிமுதல் செய்தால், சர்க்கரை கலப்படத்தை தடுக்க முடியும் என பறிமுதல் செய்து வைத்தோம். பறிமுதல் செய்யப்பட்ட வெல்லம் அனைத்தும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் வைக்கப்பட்டதால், பொங்கி, பயன்படுத்தவே முடியாததாக மாறிவிட்டது. ஆனாலும், யாரும் சர்க்கரை கலந்து வெல்லம் உற்பத்தி செய்வதை நிறுத்தவில்லை. எனவே அவற்றை சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் எடுத்துக்கொள்ள அனுமதியளித்தேன். மூட்டைக்கு, 150 ரூபாய் வாங்கினேன் என்பதெல்லாம் பொய். இவ்வாறு அவர் கூறினார். ‘காலாவதியான பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி கொடுத்ததின் மூலம், மீண்டும் அவை மக்களின் பயன்பாட்டுக்கு வருமே அதற்கு என்ன செய்ய போகிறீர்கள்?’ என கேள்வி கேட்டவுடன், திகைத்து போய், ‘விசாரிக்கிறேன்’ எனக்கூறி மொபைல் இணைப்பை துண்டித்தார்.

மீண்டும் அரை மணி நேரம் கழித்து மொபைலில் தொடர்பு கொண்ட அனுராதா கூறியதாவது: பறிமுதல் செய்யப்பட்டதில், 42 லாரிகளில் சர்க்கரை கலந்ததும், 5 லாரி சர்க்கரை கலக்காததும் இருந்தது. அதில் சர்க்கரை கலக்காத வெல்லத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள அனுமதித்தேன். ஆனால், அவர்கள் எல்லாவற்றையும் எடுத்துச்சென்றுவிட்டனர். திங்கட்கிழமை காலையில், நான் அங்கு வரும் போது, அனைத்து வெல்லமும் மார்க்கெட்டில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Salem
%d bloggers like this: