Home > DISTRICT-NEWS, Thiruvarur > மன்னார்குடி கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

மன்னார்குடி கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

1,February, 2016

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு, மருந்து நிர்வாக பிரிவினர் சனிக்கிழமை ஆய்வு செய்து ரூ. 62 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் மருத்துவர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சனிக்கிழமை மன்னார்குடியில் கீழ்ப்பாலம், மூன்றாம்தெரு, அரசு மருத்துவமனை சாலை, காந்திஜீ சாலை, பந்தலடி, பெரியகடைத்தெரு, பேருந்து நிலையம், தேரடி ஆகிய பகுதிகளில் உள்ள உணவுப் பொருள்கள் மொத்த விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் என சுமார் 75 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், உணவகங்களில் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா, சுகாதாரமாக உணவகங்கள் பராமரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வின்போது, ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான குளிர்பான பாட்டில்கள், ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் என மொத்தம் ரூ. 62 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு நகராட்சி குப்பைக் கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டன.

காலாவதியான, தடை செய்யப்பட்ட உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தவர்களுக்கு துறையின் மூலம் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற ஆய்வுகள் மாதம் ஒருமுறை நடத்தப்படும் என்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் மருத்துவர் ரமேஷ்பாபு கூறினார். ஆய்வின்போது, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எஸ். அன்பழகன், எம். பால்சாமி, கே. மணாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Categories: DISTRICT-NEWS, Thiruvarur
%d bloggers like this: