Home > NEWS > கோரிக்கை நிறைவேற்றாத அரசுகளுக்கு பாடம் புகட்டுவோம்: சேலத்தில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பேட்டி

கோரிக்கை நிறைவேற்றாத அரசுகளுக்கு பாடம் புகட்டுவோம்: சேலத்தில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பேட்டி

13,February, 2016

சேலம்: ”கடந்த, ஐந்து ஆண்டுகளாக வணிகர்களின் கோரிக்கையை ஏற்காத, மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய முறையில் பாடம் புகட்டுவோம்,” என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

சேலத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஏப்ரல், 4,5,6 தேதிகளில், டில்லியில் அகில இந்திய வணிகர்கள் மாநாடு நடக்கிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை அமல்படுத்துவதை, மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, வலியுறுத்த உள்ளோம். ஏற்கனவே அமல்படுத்துவதாக இருந்தது, மூன்று மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அதிகாரிகளின் தேவையற்ற நெருக்கடியால் வியாபாரிகள் பாதிக்கப்படுவர். சரக்கு சேவை வரி சட்டத்தை, மத்திய அரசு மறு ஆய்வு செய்து அமல்படுத்த வேண்டும். 60 வயது நிரம்பிய வணிகர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு எழுப்பப்படும். அதை தொடர்ந்து, மே, 31ம் தேதி, கோவில்பட்டியில், ஆறு லட்சம் வணிகர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட உள்ளது. வணிகர்களை குறிவைத்து அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளது. உற்பத்தி செய்வோரை விட்டு விட்டு, வியாபாரிகளை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். பொருட்கள் வாங்கி யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், அபராதம் முதல் சிறை தண்டனை வரை, வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். உற்பத்தியாளர்களிடம் ஒரு தொகையை பெற்றுக்கொண்டு, அதிகாரிகள் அவர்களை கண்டும் காணாமல் விடுகின்றனர். ஐந்து ஆண்டுகளில், மத்திய, மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கை எதையும் ஏற்கவில்லை. கோவில்பட்டியில் நடக்கும் மாநாட்டையே, ‘கோரிக்கை புறக்கணிப்புக்கு எதிரான மாநாடு’ என்ற பெயரில் தான் நடத்த உள்ளோம். கோரிக்கையை நிறைவேற்றாத அரசுகளுக்கு உரிய பாடம் புகட்டுவோம். சட்டசபை தேர்தலின்போது, வணிகர்கள், ஐந்து லட்சம் ரூபாய் வரையில், உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும். பெரிய வியாபாரிகள், 20 லட்சம் ரூபாய் வரை கொண்டு செல்ல, தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என, கேட்டு, டில்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Categories: NEWS
%d bloggers like this: