Home > DISTRICT-NEWS, Theni > போலி டீ தூள்களில் இலவம் பிஞ்சு, பூக்கள் கலப்படம்: கண்டு கொள்ளாத உணவு பாதுகாப்பு துறை

போலி டீ தூள்களில் இலவம் பிஞ்சு, பூக்கள் கலப்படம்: கண்டு கொள்ளாத உணவு பாதுகாப்பு துறை

17,February, 2016

போடி:டீத்தூளில்’ கலப்படம் செய்வதற்கு தேவையான இலவம் பிஞ்சு, பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர். உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். கேரளா மாநிலம், பூப்பாறை, நெடுங்கண்டம், குமுளி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை விளைவிக்கப்படுகிறது. இத் தேயிலையில் தயராகும் டீ தூளில் இயற்கை நறுமணம், நோய் எதிப்பு சக்தி உள்ளது.

டீ தூளில் கலப்படம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலி டீத்தூள்களில், துவர்ப்பு சுவைக்காக இலவம் பிஞ்சுகள், பூக்களை பொடியாக்கி சேர்க்கின்றனர்.

உதிரும் பூ, பிஞ்சுகள்: மாவட்டத்தில் போடி, குரங்கணி, கொட்டகுடி, சாலைப்பாறை, அத்தியூத்து, இலங்காவரிசை, பெரியகுளம், வருஷநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் இலவம் சாகுபடி செய்கின்றனர். இலவங்காய் சீசன் துவங்க உள்ள நிலையில் அதிக பனி காரணமாக பூக்களும், பிஞ்சுகளும் உதிர்கிறது. இதனை சேகரித்து விவசாயிகள் வெயிலில் காய வைத்து சில்லரை வியாபாரிகளிடம் பிஞ்சு கிலோ ரூபாய் 33 க்கும், பூ கிலோ ரூ.3 க்கும் விற்பனை செய்கின்றனர்.

வியாபாரிகள் வருகை: சில்லரை வியாபாரிகள் சேகரிக்கும் பிஞ்சு, பூக்களை வாங்குவதற்காக தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் கேரளா பகுதிகளிலிருந்து பெரிய வியாபாரிகள் வருகின்றனர். காய வைத்த பிஞ்சுகளை கிலோ ரூ. 35 முதல் ரூ.40 வரைக்கும், பூக்களை கிலோ ரூ. 5 முதல் ரூ.8க்கும் கொள்முதல் செய்கின்றனர்.கொள்முதல் செய்யும் இலவம் பிஞ்சு, பூக்களை பவுடராக்கி, அதனுடன் சாயம் சேர்த்து, டீ தூள்களில் குறிப்பட்ட சதவீதத்தில் கலப்படம் செய்கின்றனர். கலப்பட" டீ’ யை மக்கள் பருகுவதால் உடல் நலத்திற்கு தீங்கும், வயிற்று கோளாறு ஏற்படுகின்றன.

கலப்படத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் இலவம் பிஞ்சு, பூக்களை கொள்முதல் செய்வது மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றன.

கலப்படம் அறிய : இலவம் பிஞ்சு, பூக்களை பொடியாக்கி கலர் சாயம் சேர்த்த கலப்பட டீதூளை எளிதாக கண்டறியலாம். குளிர்ந்த நீரில் போலியாக தயாரிக்கப்பட்ட டீத்தூளை போட்டால் உடனே நீரில் கரையும். வெள்ளைத்துணி மற்றும் வெள்ளைத்தாளில் ஈரத்துடன் டீ தூளை போட்டால் செந்நிற கறை ஏற்படும்.

ஈரத்துடன் கைகளில் தொட்டால் மருதாணி போல் இளம் சிவப்பு நிறம் ஏற்படும். மக்களின் நலன்கருதி "டீ’ தூளில் கலப்படம் செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன், ""தரமான டீத்துளை பொறுத்தவரை தண்ணீரில் போடும் போது அதன் கலர் மிகவும் மெதுவாக இறங்கும். கலப்படமான டீ தூள் தண்ணீரில் போட்டவுடன் கலர் மட்டும் கீழே இறங்கி விடும். இதற்கான கருவிகள் உள்ளதால் உடனடியாக சோதனை செய்து டீத்தூளில் கலப்படத்தை கண்டு பிடித்து விடலாம்.

டீ தூளில் இலவம் பிஞ்சு, பூக்களின் பவுடரை கலப்படம் செய்திருந்தாலும், ஸ்டாக் பாயிண்ட் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் கலப்பட டீ தூள் அழிப்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Categories: DISTRICT-NEWS, Theni
%d bloggers like this: