Home > DISTRICT-NEWS, Madurai > தனி விசாரணை… தனிப்படை! ‘தனி ஒருவனாக’ வலம் வந்த ஏட்டு:பணம் கேட்டு மிரட்டிய ‘ஞானம்’

தனி விசாரணை… தனிப்படை! ‘தனி ஒருவனாக’ வலம் வந்த ஏட்டு:பணம் கேட்டு மிரட்டிய ‘ஞானம்’

22,February, 2016

மதுரை;மதுரையில், ஓட்டல் உரிமையாளரை மிரட்டி ரூ.ஒரு லட்சம் கேட்ட வழக்கில், பா.ஜ., நிர்வாகி உட்பட 5 பேர் சிக்கினர். இதில், சிறப்பு புலனாய்வு பிரிவு ஏட்டு ஞானசேகரனும்,45, அடங்குவார். இவர் 15 ஆண்டுகள் லஞ்சஒழிப்பு பிரிவில் பணியாற்றியவர்.மதுரை அரசரடியில் சைவ ஓட்டல் நடத்தி வருபவர் சீனிவாசன்,37. இவரது அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், ‘நாங்கள் உணவு பாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்கள். ஓட்டல் சுகாதாரமாக இல்லை. விலையும் அதிகமாக உள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.ஒரு லட்சம் தரவேண்டும்’ என மிரட்டினார். எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு சீனிவாசன் தகவல் தெரிவித்தார்.நேற்றுமுன்தினம் பணம் வாங்குவதற்காக செல்லம்பட்டி குபேந்திரன், விக்கிரமங்கலம் மகாமுனி ஆகியோர் காரில் வந்தனர். உடன் கோரிப்பாளையம் ஆனந்தகுமார் உட்பட 2 பேர் இருந்தனர். அவர்களை திலகர்திடல் உதவி கமிஷனர் பீர்முகைதீன் தலைமையிலான தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். ‘மதுரை காளவாசல் சிக்னல் அருகே ஒருவர் காத்திருக்கிறார். அவர்தான் எங்களை அனுப்பி பணம் வாங்கி வரச்சொன்னார்’ என்றனர்.

சுற்றிவளைக்கப்பட்ட ஏட்டு:இதைதொடர்ந்து சிக்னல் அருகே நின்றிருந்த அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் வாலாந்துாரைச் சேர்ந்த பிரேம் எனத்தெரிந்தது.

பா.ஜ., மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார். ‘மதுரை நகர் சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.சி.,) ஏட்டு ஞானசேகரன் என்பவர் கொடுத்த ‘ஐடியா’படிதான் நாங்கள் செயல்பட்டோம்’ என்று பிரேம் கூறினார்.

பின்னர், போலீஸ் அறிவுரைபடி ‘பணம் வாங்கிவிட்டதாக’ ஞானசேகரனிடம் பிரேம் அலைபேசியில் கூறினார். இதைதொடர்ந்து சுப்பிரமணியபுரம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஞானசேகரன், பழங்காநத்தம் ரவுண்டானா அருகே பிரேமை சந்திக்க வந்தபோது போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டார்.

‘எனக்கு சம்பந்தமில்லை’ஏட்டுவிடம் நடத்திய விசாரணையில், ‘எனக்கும், மிரட்டி பணம் கேட்டதற்கும் சம்பந்தமில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், அந்த ஓட்டல் குறித்து விபரம் தெரிய வேண்டும் என்றனர். நான் மனு தயாரித்து கொடுத்தேன்’ என்றார். ‘பணம் வாங்கி

விட்டதாக பிரேம் தெரிவித்ததும் உடனடியாக நேரில் சந்திக்க வந்தது ஏன்’ என உயர்அதிகாரிகள் கேட்டதற்கு, ஏட்டு மழுப்பலான பதில்களை தெரிவித்தார்.

மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளாக பிரேம் மற்றும் சிலர் சேர்க்கப்பட்டனர். நேற்று மாலை பிரேம், மகாமுனி, குபேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஞானசேகரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடக்கிறது.

போலீசார் கூறியதாவது:ஓட்டலில் பிப்.,18 இரவு குபேந்திரன், மகாமுனி ஆகியோர் சாப்பிடுவது போல் வந்து ஓட்டல் சூழ்நிலையை கண்காணித்து, பிரேமுக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, சீனிவாசனிடம் பிரேம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மதங்கள் தொடர்பாக

விசாரிக்கும் எஸ்.ஐ.சி., பிரிவில் ஞானசேகரன் இருப்பதால், பா.ஜ., நிர்வாகி என்ற முறையில் பிரேமுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

ஞானசேகரன் 15 ஆண்டுகளாக லஞ்சஒழிப்பு பிரிவில் இருந்தார். பட்டாசு கடைகள், விடுதிகளுக்கு சென்று ‘உங்கள் மீது புகார் வந்துள்ளது’ என்றுக்கூறி பணம் கேட்டு மிரட்டியதாக அப்போதே அவர் மீது புகார் எழுந்தது. பின்னர், மதுவிலக்கு பிரிவில் பணியாற்றிவிட்டு, சில ஆண்டுகளாக எஸ்.ஐ.சி.,யில் ‘பவர்புல்’ ஆளாக இருந்து வருகிறார்.

சிலரிடம் தொடர்ந்து அவர் மிரட்டல் விடுத்து ‘காரியம்’ சாதித்துள்ளார். இதுகுறித்த ஆடியோ பதிவுகள் கிடைத்துள்ளன. அதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். தனி விசாரணை, தனக்கென ஆட்கள் என போலீஸ் துறையில் ‘தனி ஒருவனாக’ ஞானசேகரன் வலம் வந்துள்ளார். இதன் பின்னணியில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டா என விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.

Categories: DISTRICT-NEWS, Madurai
%d bloggers like this: