Home > DISTRICT-NEWS, Tirunelveli > குளிர்பானங்களின் தரம் பரிசோதிக்கப்படுமா?நெல்லை, தூத்துக்குடி மக்கள் எதிர்பார்ப்பு

குளிர்பானங்களின் தரம் பரிசோதிக்கப்படுமா?நெல்லை, தூத்துக்குடி மக்கள் எதிர்பார்ப்பு

12,March, 2016

கோடை வெயிலின் தாக்கம் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்திலேயே சுட்டெரிக்க ெதாடங்கி விட்டது. நாளுக்கு நாள் வெயில் அதிகரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வெளியில் தலைகாட்டவே தயங்குகின்றனர். அனல் காற்று வீசுவதால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். வெயிலின் தாக்கத்தை பயன்படுத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாலையோர குளிர்பான கடைகள் புற்றீசல் போல் ஆங்காங்கே தொடங்கியுள்ளன. குறிப்பாக நெல்லை மாநகர பகுதிகளில் இவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாளை, சமாதானபுரம், வண்ணார்பேட்டை, மேலப்பாளையம், ஜங்ஷன், டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சாலையோர கடைகள் ஏராளம் முளைத்துள்ளன.

இவை தவிர இளநீர் கடைகளும் ஆங்காங்கே தோன்றியுள்ளன. செங்கோட்டை, தென்காசி, பணகுடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இளநீர் வந்து குவிகிறது. கடந்த மழை சீசனில் நல்ல மழை பெய்துள்ளதால் இளநீர் விளைச்சல் அதிகளவில் உள்ளது. வரத்து அதிகமாக இருந்தாலும் விலை கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது. ரூ.15க்கு கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட இளநீர் தற்போது ரூ.20க்கு விற்பனையாகிறது. செவ்விளநீர் ரூ.30, முதல் ரூ.40 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சில பகுதிகளில் சாதாரண இளநீர் ரூ,10க்கும் கிடைக்கிறது. விலை குறைவாக உள்ள கடைகளில் விற்பனை ஜோராக நடக்கிறது. இதேபோல் பதனீர் மற்றும் பிற குளிர்பான விற்பனையும் அமோகமாக உள்ளது.நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உணவு பொருட்கள், பால், குடிநீர் ஆகியவற்றின் தரத்தை உறுதிப்படுத்த உணவு பாதுகாப்பு ஆணையரகம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்வோர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நெல்லை, தூத்துக்குடி பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் குளிர்பான மற்றும் பெட்டிக்கடைகளில் குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட் அதிகளவில் விற்பனையாகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் காலாவதியானவையும் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் சார்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.சாலையோரம் விற்கப்படும் பதநீரில் சாக்ரின் என்ற வேதிப்பொருள் அதிகளவு கலந்து விற்கப்படுவதாகவும், விலை குறைந்த பாக்கெட் குளிர்பானங்களில் தடை செய்யப்பட்ட ரசாயன நிறங்கள் மற்றும் சாக்ரின் அதிகம் கலக்கப்படுவதாகவும், சுத்தப்படுத்தப்படாத தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்களைஅதிகம் வெயில் படும் இடங்களில் வைக்கக் கூடாது. ஆனால் சாலையோரம் விற்பவர்கள் இவற்றை பொருட்படுத்துவதில்லை. இதேபோல் கலவை பழச்சாறு விற்பனையில் சிவப்பு நிறம் வருவதற்காக கூடுதலாக ரசாயன நிறமியை பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல் தள்ளுவண்டியில் விற்பனைக்கு கொண்டு வரப்படம் ஐஸ், ஐஸ்கிரிம், குல்பி ஐஸ் போன்றவையும் சுகாதாரம் இல்லாமல் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காலாவதியான, அதிகம் ரசாயனம் கலந்த உணவு பொருட்களை உட்கொள்ளும் போது பல்வேறு நோய் தாக்குகிறது. குறிப்பாக குழந்தைகள் நோய்தொற்றுக்கு ஆளாகின்றனர். எனவே குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் தரமானதாக விற்பனை செய்ய வேண்டும் என்றும், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வோர் மீது மாவட்ட உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli
%d bloggers like this: