Home > Dindigul, DISTRICT-NEWS > பழநி பகுதியில் பான்மசாலா பொருட்கள் பறிமுதல் உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிரடி

பழநி பகுதியில் பான்மசாலா பொருட்கள் பறிமுதல் உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிரடி

21,March, 2016

பழநியில் விற்பனை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்மசாலா பொருட்களை உணவுப்பொருள் பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம் இத்திருவிழா துவங்கி நடந்து வருவதால், தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி நகருக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில் குட்கா மற்றம் பான்மசாலா பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
தடை உத்தரவு அமலில் இருந்தும் கடைகளில் இத்தகைய பொருட்களின் விற்பனை தங்கு தடையின்றி நடந்து வருகிறது. வழக்கமாக விற்பனை செய்யும் விலையை விட 2 மடங்கு அதிக விலைக்கு இப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பழநியில் உள்ள பெரும்பாலான கடைகளில் குட்கா மற்றும் பான்மசாலாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பான்மசாலாக்கள் மற்றும் குட்காக்கள் பயன்படுத்தும் மக்கள் அதன் எச்சில்களை சாலைகளிலேயே உமிழ்ந்து செல்கின்றனர். பழநி அடிவாரம் பகுதியில் மலைக்கோயில் செல்லும் பக்தர்கள் செருப்பு அணியாமல் வெறும் காலில்தான் நடந்து செல்வது வழக்கம். பான்மசலாக்களின் எச்சங்களை காலில் மிதிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களின் விற்பனையை தடுக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பழநி உணவு பாதுகாப்பு அலுவலர் மோகனரங்கம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 120க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பாக்கெட்டுகள் 1400, 5 கிலோ குட்கா வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  17 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குட்கா மற்றும் பான்மசாலாக்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடமும், கடைக்காரர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வது, சுகாதாரமில்லாத உணவு பொருட்கள் விற்பனை செய்வது, விலை பட்டியல் இல்லாத உணவு கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.   

Categories: Dindigul, DISTRICT-NEWS
%d bloggers like this: