Home > NEWS > கோடை வெயில் எதிரொலியால் விற்பனை அதிகரிப்பு பேக்கிங் குடிநீரின் தரம் ஆய்வு செய்யப்படுமா?

கோடை வெயில் எதிரொலியால் விற்பனை அதிகரிப்பு பேக்கிங் குடிநீரின் தரம் ஆய்வு செய்யப்படுமா?

30,March, 2016

தர்மபுரி, : தர்மபுரி மாவட்டத்தில் பேக்கிங் குடிநீர் விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து பேக்கிங் குடிநீரின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டாலும், அதில் கிணற்று நீரை கலந்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் வினியோகம் செய்கின்றன.
இதனால் பெரும்பாலானவர்கள் வாட்டர் கேன் தண்ணீரையே பயன்படுத்துகின்றனர். குடிநீரால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை பாதுகாக்க மக்கள் நினைப்பதால், பாட்டில் தண்ணீர் விற்பனை பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங்குகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதிகமாக உள்ளது. பல வீடுகளில் ஆர்ஓ பிளான்ட் பொருத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஆர்ஓ பொருத்த வசதியில்லாதவர்கள் பேக்கிங் குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கேன்களில் பேக்கிங் குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் 50க்கும் மேற்பட்டவை உள்ளது. இது தவிர சேலம், கரூர் மாவட்டங்களில் இருந்தும் கேன் குடிநீர், தர்மபுரி மாவட்டத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
நடப்பாண்டில் மார்ச் மாதத்திலேயே கோடை காலம் துவங்கி விட்டது. இதனால் குடிநீரின் தேவை இருமடங்காகி, பேக்கேஜ்டு குடிநீர் கேன்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. கேன்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டுள்ளதா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘கோடை காலம் என்பதால் வழக்கத்தை விட குடிநீர் தேவை அதிகமாக உள்ளது. 4 பேர் உள்ள வீட்டிற்கு வாரத்திற்கு 75 லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. கோடை என்பதால் இது 150 லிட்டராக உயர்ந்துவிட்டது. 3 கேன் வாங்கியவர்கள் 6 கேன் வரை வாங்க வேண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக கேன்களில் அடைக்கப்பட்டுள்ள குடிநீர் சுவை மாறி வருகிறது. எனவே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தான் பேக்கிங் செய்கிறார்களா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்’ என்றனர்

Categories: NEWS