Home > DISTRICT-NEWS, Karur > தரமற்ற ஆட்டிறைச்சி விற்பனை

தரமற்ற ஆட்டிறைச்சி விற்பனை

30,March, 2016

கரூர்: கரூர் நகராட்சி பகுதியில், தரமற்ற ஆட்டிறைச்சி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை சமைத்து சாப்பிடும் பொதுமக்கள், வயிற்று உபாதை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ ஆட்டிறைச்சி, 400 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கரூர், வெங்கமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு கிலோ தரம் குறைந்த ஆட்டிறைச்சி, 300 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆடுகளை விலைக்கு வாங்கி வந்து, இறைச்சிக்காக வெட்டுகின்றனர். இந்த ஆடுகள் வளர்க்க ஊசி மற்றும் மருந்து கொடுக்கின்றனர். இதனால், ஆடுகள் எடை அதிகரித்து விடுகிறது. வெளிமாநிலத்தில் கொண்டு வரப்படும் ஆடுகளை வெட்டி, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகளிடம் இதுகுறித்து கேட்டால், ‘பிராய்லர் கோழி போல, பிராய்லர் ஆடுகள்’ என்கின்றனர். ஒரு கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஆட்டிறைச்சி, விரைவாக வெந்து விடுகிறது. ஆனால், சாப்பிட்டால் ஜீரணம் ஆகாமல் வயிற்று உபாதை ஏற்படுகிறது. குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படும், ஆட்டிறைச்சி குறித்து, உணவு பாதுகாப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Categories: DISTRICT-NEWS, Karur
%d bloggers like this: