Home > NEWS > ஓட்டல் உணவுகளின் தர சோதனை செய்வது அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் பாதிப்பு

ஓட்டல் உணவுகளின் தர சோதனை செய்வது அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் பாதிப்பு

4,April, 2016

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும், டீபன் சென்டர்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் தரமற்ற உணவை வாங்கி சாப்பிடுவோருக்கு வயிற்று வலி, வாந்தி போன்ற உபாதைகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

நகராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், உணவகங்களில் தயாராகும் உணவுகளின் தரம் குறித்து சுகாதார அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். இப்பணி தற்போது சுகாதார அலுவலக கட்டுப்பாட்டில் டாக்டர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தனி பிரிவாக செயல்படுகிறது.

இவர்களுக்கு போதிய வசதி இல்லாததால் உணவு பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. உணவுப் பொருள் விற்பனை உரிமம் , கட்டணம் நிர்ணயிப்பதில் வியாபாரிகளுக்குள் முரண்பாடு நிலவியதால் முழுமையாக உரிமம் வழங்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனையில் தொய்வு ஏற்பட்டது.

இதை சாதகமாக்கி நகரில் சாலையோர உணவகங்கள் புற்றீசல் போல் பெருகிவருகிறது. இக்கடைகளை நகராட்சி அலுவலர்கள் சோதனை செய்ய முடியாத நிலை நிலவுவதால் தரமற்ற உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவோருக்கு வயிற்று உபாதைகள் ஏற்படுகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில்,"" ஓட்டல் உணவுகளின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும்.

நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கும் ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு. சாலையோரக் கடைகளில் சமையலுக்கு கலப்பட எண்ணெய், கலப்பட பொருள் கலந்து உணவு தயாரித்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Categories: NEWS
%d bloggers like this: