Home > NEWS > கேள்விக்குறியாகும் உணவுப் பொருள்களின் தரம்: ஆய்வை தீவிரப்படுத்துமா உணவுப் பாதுகாப்பு துறை?

கேள்விக்குறியாகும் உணவுப் பொருள்களின் தரம்: ஆய்வை தீவிரப்படுத்துமா உணவுப் பாதுகாப்பு துறை?

4,April, 2016

உணவுப் பொருள்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு இலக்கு நிர்ணயித்து ஆய்வு நடத்தப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  சாலையோரக் கடைகள் மட்டுமின்றி, துரித உணவு முதல் குளிர்பானங்கள் வரையிலான இன்றைய உணவுப் பொருள்களின் தரம், நுகர்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

  லாப நோக்கத்துக்கான உணவுப் பொருள்கள் மட்டுமின்றி, திருமண மண்டபம், அன்னதானம் வழங்குமிடம், கோயில் பிரசாதக் கடைகள், பள்ளி வளாகங்களில் செயல்படும் உணவகம், சத்துணவு, மதுபானக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை ஆய்வு செய்வதற்காக, கடந்த 2008 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை உருவாக்கப்பட்டது.

  இந்தத் துறையின் கீழ், தமிழகம் முழுவதும் தற்போது 460 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். உணவுத் தொழிலில் ஈடுபடுவோர் தரமான, பாதுகாப்பான, தீமை ஏற்படுத்தாத உணவுப் பொருள் தயாரிப்பதற்கு வழிகாட்டுவது உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் முக்கியப் பணியாக உள்ளது.

  மேலும், உணவு மாதிரி எடுப்பது, காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்வது, அவற்றை அழிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியதும் இவர்களின் பொறுப்பு. ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்கும் மேல் விற்பனை செய்வோருக்கு உணவுத் தொழிலுக்கான உரிமம் வழங்குதல், அதற்கு குறைவான வருமானம் கொண்ட தொழில்களை பதிவு செய்து சான்றிதழும் அளித்து வருகின்றனர்.

  உணவு உற்பத்தித் துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆனால், தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே நுகர்வோரின் குற்றச்சாட்டாக உள்ளது.

  ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட உணவுப் பொருள்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யவேண்டும் என்ற இலக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு நியமிக்கப்படவில்லை. இதனால், கலப்பட உணவுப் பொருள்களை கண்டறிவதிலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும், விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் விவரங்களை சேகரிக்கவும், புதிய பொருள்களின் வரவு குறித்தும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கே தெரியாத நிலை உள்ளது.  சுகாதாரத் துறையின் மீது கூடுதல் கவனம் செலுத்தும் அரசு, வரும் முன் காக்கும் நடவடிக்கையாக உணவுத் தொழிலில் ஈடுபடுவோரை தொடர்ந்து கண்காணிப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.   இது குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் தெரிவித்தது: பொதுமக்களின் சுகாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வரும் இந்தத் துறைக்கு, தனி ஆணையர் நியமிக்கப்படவில்லை. மேலும், நகராட்சித் துறை மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் துறைகளில் இருந்துகொண்டே அயல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். களஆய்வுப் பணிகளுக்கு உதவியாளர்கள் இல்லை. அதேபோல், அலுவலர்களின் செயல்பாடுகள் சீராய்வு செய்யப்படுவதில்லை.

  ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கை எடுப்பதற்கும் வழியில்லை என்பதால், அலுவலர்களின் செயல்பாடும் கேள்விக் குறியாகியுள்ளது என்றார்.

Categories: NEWS
%d bloggers like this: