Home > DISTRICT-NEWS, Salem > காலாவதியான 520 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை

காலாவதியான 520 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை

13,April, 2016

 

சேலம் அருகே நிலவாரப் பட்டியில் காலாவதியான 520 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி தலைமையிடம்
முன்னணி நிறுவனத்தின் குளிர்பான பாட்டில்களை தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் வாங்கி, அதை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சப்ளை செய்து வருகிறது.
தர்மபுரியில் இருந்து சேலம் சின்னத்திருப்பதியை சேர்ந்த மோகன் என்பவர் மொத்தமாக குளிர்பான பாட்டில்களை வாங்கி, அதை சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்கு ஆட்டோ மூலம் சப்ளை செய்து வருகிறார். இந்த நிலையில், சேலம் அடுத்த நிலவாரப்பட்டியில் உள்ள ஒரு கடைக்கு, சரக்கு ஆட்டோவுடன் டிரைவர் சப்ளைக்காக கொண்டு சென்றார்.
காலாவதியான குளிர்பானங்கள்
அப்போது கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், பாட்டிலில் தயாரிப்பு தேதியை பார்த்ததும் அவை காலாவதியான குளிர்பானங்கள் என அறிந்தார். அதாவது, தயாரிப்பு தேதி சில பாட்டில்களில் 15.8.2015 என்றும், சில பாட்டில்களில் 2.9.2015 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றை 3 மாதத்திற்கு மட்டுமே உபயோகிக்க முடியும். ஆனால், அந்த குளிர்பான பாட்டில்களில் உள்ள தயாரிப்பு தேதி குறிப்பிட்ட 3 மாதத்தை கடந்து விட்டதால் காலாவதியானது என்பது உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக கடைக்காரரை தொடர்பு கொண்டு, அந்த சரக்கு ஆட்டோவை பிடித்து வைக்க உத்தரவிட்டார். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று காலாவதியான குளிர்பான பாட்டில்கள் 520 பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பாட்டில்கள் 300 மில்லி, 600 மில்லி அளவுடையவை.
அதிகாரி அறிவுரை
அதைத்தொடர்ந்து பாட்டில்கள் அனைத்தும் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு அழிக்கப்பட்டன. இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது:-
சின்னத்திருப்பதியை சேர்ந்த மோகன் என்பவர் தர்மபுரியில் இருந்து முன்னணி நிறுவனத்தின் குளிர்பானங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்துள்ளார். தர்மபுரியில் உள்ள அந்த நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, மோகன் யார் என்றே தெரியாது என கூறி விட்டார். காரணம், குளிர்பானங்கள் வாங்கியதற்கான ஆவணங்கள் எதையும் மோகன் கேட்டு வாங்கவில்லை என்பதால், அவர் பொய் சொல்லி இருக்கிறார். காலாவதியான குளிர்பான பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக மோகனுக்கு எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் குளிர்பானங்களை விரும்பி அருந்தி வருகிறார்கள். அவ்வாறு வாங்கும் பாட்டில் களின் தயாரிப்பு தேதியை பார்த்து பொதுமக்கள் வாங்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்ளை 3 மாதம்வரை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். கண்ணாடி பாட்டில்களில் அடைத்து 6 மாதம்வரை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.
6 குழுக்கள் நியமனம்
காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறிய மாவட்ட அளவில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், விழா நடைபெறும் இடங்களில் அக்குழுவினர் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் காலாவதியான பொருட்கள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்களும் எங்களுக்கு தெரிவிக்கலாம். காலாவதியான பொருட்களால் வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டு வாந்தி எடுத்து உடல்சோர்வை உண்டாக்கும். எனவே, இயற்கையான குளிர்பானங்கள் அருந்துவதையே பொதுமக்கள் பழக்கப்படுத்தி கொள்வது நல்லது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Categories: DISTRICT-NEWS, Salem
%d bloggers like this: