Home > Coimbatore, DISTRICT-NEWS > ரசாயன கல் வைத்து பழுக்க வைத்த 400 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

ரசாயன கல் வைத்து பழுக்க வைத்த 400 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

13,April, 2016

T

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் ரசாயன கல் வைத்து பழுக்க வைத்த 400 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாம்பழங்கள் பறிமுதல்

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் ஒரு சில வியாபாரிகள் மாம்பழங்களை கார்படைடு என்னும் ரசாயன கல் வைத்து பழுக்க வைப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய் ரசாயன கல்வைத்து பழுக்க வைக்கும் மாம்பழங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து பொள்ளாச்சி மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோவிந்தராஜ், சுப்புராஜ், செல்வபாண்டியன், செந்தில்குமார் ஆகியோர் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு சரக்கு ஆட்டோவில் மாம்பழங்களை ஏற்றிக் கொண்டு சிலர் வந்தனர். அந்த ஆட்டோவில் சோதனை செய்ததில், மாம்பழங்கள் பழுக்க ரசாயன கல் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் சரக்கு ஆட்டோவில் இருந்த 400 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

வயிற்றுப்போக்கு ஏற்படும்

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:– கார்படைடு என்னும் ரசாயன கல் வைத்து பழக்க வைக்கப்படும் மாம்பழங்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் ரத்த புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே ரசாயன கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து பொள்ளாச்சி மார்க்கெட் பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.

கடைகளில் யாரும் ரசாயன கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைப்பதாக கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில் மார்க்கெட்டுக்கு சரக்கு ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட மாம்பழங்கள் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 400 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS
%d bloggers like this: