Home > NEWS > புற்றுநோயை அதிகரிக்கும் உணவு பாதுகாப்பு துறை

புற்றுநோயை அதிகரிக்கும் உணவு பாதுகாப்பு துறை

14,April, 2016

தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த, அரசால் முடியவில்லை. உணவு கலப்படம் தடுக்கப்படாததால், தமிழகத்தில், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து
விட்டது என்பதே உண்மை.
நுகர்வோருக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைக்கச் செய்ய, மத்திய அரசு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தை, 2006ல் கொண்டு வந்தது. இதற்கான தனி ஆணையரகத்திற்கு, தேர்தல் கமிஷன் போன்று, சிறப்பு அதிகாரம் தரப்பட்டுள்ளது. மாநிலங்களில்,
சுகாதாரத் துறையின் கீழ், உணவு பாதுகாப்பு துறை செயல்பட்டு வருகிறது.உணவு தயாரிப்பு, கொள்முதல், விற்பனை, பயன்பாடு என, எல்லா நிலைகளிலும் தரத்தை உறுதி செய்வது இத்துறையின் வேலை. தமிழகத்தில், உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர், மாவட்ட நியமன அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், 540 பேர் உள்ளனர். மற்ற மாநிலங்களை விட, அதிகம் இருந்தும், தமிழகத்தில், செயல்பாடற்ற
துறையாகி விட்டது. வெளி மாநிலங்களில் இருந்து, ரயில்கள் மூலம், கெட்டுப்போன ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி தமிழகத்திற்கு அதிகம் வருகிறது. குறைந்த விலையில் வாங்கி, சாலையோர கடைகள் மட்டுமின்றி, பிளாட்பார கடைகளிலும், உணவு தயாரிக்கின்றனர்.
இதை சாப்பிடுவதால், உணவுக் குழாய் பாதிப்பு, குடல் புற்றுநோய் வரும். மாம்பழம், வாழைப் பழம், ஆகியவற்றை, ‘கெமிக்கல் ஸ்பிரே’ அடித்து பழுக்க வைக்கும் கொடூரம் நடக்கிறது. திராட்சை பழங்கள் கெடாமல் இருக்க, திராட்சையை கொத்துக் கொத்தாக துண்டித்து, குடுவையில் உள்ள வேதிக் கலவையில் போட்டு விற்பனைக்கு அனுப்புகின்றனர். வெண் பவுடர் படர்ந்த திராட்சையை கழுவாமல், அப்படியே சாப்பிடுகிறோம். இவை அனைத்தும், வயிற்று வலி, உணவுக் குழாய் பாதிப்பு, புற்றுநோய்
பாதிப்பையும் ஏற்படுத்தும்.உணவகங்களில், பயன்படுத்திய எண்ணெயை, மீண்டும், மீண்டும் பயன்படுத்துகின்றனர். இவை, கட்டாயம் புற்றுநோயை உண்டாக்கும்.
மிளகாயின் நிறம், ஓரிரு மாதங்களில், கறுப்பாக மாறிவிடும்; அவை விற்பனை ஆகாது. அவற்றை, மிளகாய் பொடியாக்கி, சிவப்பு நிறத்திற்காக, ‘சூடான் திரி’ என்ற, ரசாயனத்தைக் கலக்கின்றனர். இதைத்தான், உணவகங்களில் பயன்படுத்துகின்றனர்; நாமும், சப்புக் கொட்டி சாப்பிடுகிறோம். இதனால், கண் பார்வை மங்கும்; புற்றுநோய் வரும்.
எண்ணெய் விற்பனையில், பெரும் தில்லுமுல்லு நடக்கிறது. கடலை எண்ணெய் எனச் சொல்லி பாமாயிலை விற்கின்றனர். சூரியகாந்தி எண்ணெய் என, தவிட்டு எண்ணெய் கலந்து விற்கின்றனர். டால்டா மேல் நெய்யை தடவி, ஒரிஜினல் நெய் என விற்கின்றனர். மக்களின் உயிரோடு விளையாடும் கலப்பட கும்பலைத் தடுக்க வேண்டிய, தமிழக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல், அவர்களுக்கு துணை போகின்றனர்.
உணவு பாதுகாப்புத் துறையின் கீழ், ஏழு ஆய்வகங்கள் உள்ளன. இவற்றுக்கு, ‘நேஷனல் அக்ரெடிடேஷன் போர்டு ஆப் லேபரட்ரீஸ்’ அனுமதி பெற வேண்டும். ஐந்து ஆண்டுகளில், இந்த அனுமதியைக்கூட, தமிழக அரசு பெறவில்லை.
சுதந்திரமாக செயல்பட வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை, கலப்பட கும்பல் சுதந்திரமாக செயல்பட வழிவகுத்து விட்டது. இதுவே தமிழகத்தில், புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைந்துவிட்டது.
தமிழகத்தை விட, குறைந்த ஆளவில் உணவு பாதுகாப்பு அலுவலர்களைக் கொண்ட, கேரளா, கோவா, மஹாராஷ்டிராவிலும், இத்துறை சிறப்பாக செயல்படும்போது, இங்கு மட்டும் சிறப்பாக செயல்படாதது வருத்தத்துக்குரியது. கொலை, கொள்ளையை தடுப்பதில் எடுக்கப்படுவதாக சொல்லப்படும் கவனம், மக்களை கொஞ்சம், கொஞ்சமாக கொல்லும் உணவு கலப்படத்தை தடுப்பதிலும் தேவை. எந்த அரசு அமைத்தாலும், இதில் சிறப்புக் கவனம் செலுத்துவது அவசியம்.
எம்.சோமசுந்தரம்தொடர்பு அலுவலர், இந்திய நுகர்வோர் சங்கம்

Categories: NEWS
%d bloggers like this: