Home > DISTRICT-NEWS, Madurai > தண்ணீர் பாக்கெட்டில் தேதி இல்லை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தண்ணீர் பாக்கெட்டில் தேதி இல்லை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

18,April, 2016

மேலுார்:மேலுாரில் விற்கப்படும் தண்ணீர் பாக்கெட்களில் உற்பத்தி தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் உள்ளதால் பொதுமக்களின் உடல்நலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மேலுார் மற்றும் கிராமப்பகுதிகளில் இருந்து வரும் மக்கள், மேலுார் பஸ் ஸ்டாண்ட் கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாக்கெட்டுகளை விலைக்கு வாங்கி குடிக்கின்றனர்.

இந்த பாக்கெட்டுகள் மேலுார் அருகே சூரக்குண்டு, நரசிங்கம்பட்டி, அ.வள்ளாலபட்டி,

திருவாதவூர், ஆட்டுக்குளம், மாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படுகின்றன.

இந்த பாக்கெட்டை தயாரித்து முப்பது நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்பதை மட்டும் பிரின்ட் செய்யும் நிறுவனத்தினர், பாக்கெட் தயார் செய்த நாள், பேஜ் நம்பர் போன்றவற்றை குறிப்பிடுவது இல்லை. ஆனால் ஐ.எஸ்.ஐ., முத்திரை மட்டும் உள்ளது. அதுவும் போலியா என தெரியவில்லை.

பொதுமக்கள் கூறியதாவது: அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தரமற்ற பாக்கெட்டுகளை சப்ளை செய்து சிலர் ‘கல்லா’ கட்டி வருகின்றனர். அதனால் மேலுார் பகுதிகளில் பாக்கெட் தண்ணீரை குடிக்கும் பொதுமக்கள் பலர் நோய்களுக்கு ஆளாகும் சூழல் உள்ளது. இதை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக, தயாரிப்பு நிறுவனத்தினர் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ‘கப்பம்’ கட்டி வருகின்றனர், என்றனர்.விதிமுறை என்ன: தண்ணீர் சுத்திகரிக்கப்படும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தண்ணீரை அவ்வப்போது மாதிரி எடுத்து, ஆய்வு செய்து, பேஜ் நம்பர் ஒட்டி, அதற்குரிய ரிசல்ட்டை பதிவேட்டில் பகுப்பாய்வாளர் குறிக்க வேண்டும்.

இதை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட அதிகாரிகள் மாதம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்பது விதி.

Categories: DISTRICT-NEWS, Madurai
%d bloggers like this: