Home > Coimbatore, DISTRICT-NEWS > எச்சரிக்கை உணவு பண்ட விற்பனையாளர்களுக்கு தரமில்லாவிட்டால் நடவடிக்கை உறுதி

எச்சரிக்கை உணவு பண்ட விற்பனையாளர்களுக்கு தரமில்லாவிட்டால் நடவடிக்கை உறுதி

20,April, 2016

உடுமலை: உடுமலை தேர்த்திருவிழாவையொட்டி, தற்காலிகமாக அமைக்கப்படும் உணவு பொருட்கள் விற்பனையகங்களில், தரமில்லாத பொருட்களை விற்பனை செய்தால், உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒரு வாரத்துக்கும் அதிகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குட்டைத்திடல், தளி ரோடு உட்பட பல்வேறு இடங்களில், தற்காலிக உணவகங்கள் அமைக்கப்படுகின்றன.

இங்கு, பல்வேறு உணவுப்பொருட்கள் இரவு வரை விற்பனை செய்யப்படுகின்றன. பாஸ்ட் புட், அப்பளம், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் ஆகியவை விற்பனை செய்யும் தற்காலிக கடைகளில், சுகாதாரம் முறையாக பின்பற்றப்படுவதில்லை என புகார் உள்ளது.

இதனால், அக்கடைகளில், உணவு பொருட்களை வாங்கி சாப்பிடும், மக்கள், வயிறு உபாதைகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. கடந்தாண்டு தேர்த்திருவிழாவின் போது, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், நகராட்சி அலுவலர்களுடன் இணைந்து ஆய்வு நடத்தி, ‘சில்லி’ தயாரிக்க, இருப்பு வைக்கப்பட்டிருந்த தரமில்லாத காலிபிளவர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆலோசனைக்கூட்டம்

இம்முறை, முன்னெச்சரிக்கையாக, குட்டை திடல் பகுதியில், கடைகள் அமைப்பவர்களுக்கு, உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, விதிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர். உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காமராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விளக்கினர்.

தரமான கலப்படமற்ற, பொருட்களில் உணவு தயாரித்து, ஈக்கள் மொய்க்காதவாறு, துாசி படாமல், மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட, உணவு சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு தயாரிக்குமிடம், பரிமாறும் இடம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பான குடிநீர் வழங்கி, உபயோகிக்கும் பாத்திரங்களை சுடுநீரால், கழுவி பயன்படுத்தலாம். உபயோகப்படுத்தப்பட்ட, உணவு எண்ணெய்யை மீண்டும் உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது.

தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்கள் சுத்தமாகவும், கொசுப்புழு உற்பத்தியாகமாலும், பார்த்து கொள்ள வேண்டும். அப்பளம் விற்பனை செய்பவர்கள், திறந்த வெளியில் அப்பளங்களை காயவைக்க கூடாது. இத்தகைய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரமற்ற முறையில், தயாரித்து, உணவு பண்டங்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories: Coimbatore, DISTRICT-NEWS
%d bloggers like this: