Home > NEWS > அரசு தடையை மீறி குட்கா ஜர்தா விற்பனை ஜோர் : கண்டு கொள்ளாத நடவடிக்கை குழுக்கள்

அரசு தடையை மீறி குட்கா ஜர்தா விற்பனை ஜோர் : கண்டு கொள்ளாத நடவடிக்கை குழுக்கள்

22,April, 2016

உணவு பாதுகாப்பு துறையுடன், பிற துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததால் தமிழகத்தில் தடையை மீறி குட்கா, ஜர்தா விற்பனை அமோகமாக நடக்கிறது. புகையிலைப் பொருட்களால் புற்று நோய் வருவதைக் கருத்தில் கொண்டு குட்கா, ஜர்தா வகைகளுக்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததன் பயனாக தமிழகத்திலும் இவற்றை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி விற்றால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பையடுத்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனையை தடுக்க ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனைகள் நடத்தி குட்கா, ஜர்தாவை பறிமுதல் செய்தனர். ஆனால் சமீபகாலமாக இந்த நடவடிக்கைகளை மறந்தே விட்டனர்.
சுங்கச் சாவடிகளில், வணிகவரி அதிகாரிகள் சரியாக கண்காணிக்காததால் வட மாநிலங்களில் இருந்து குட்கா, ஜர்தா வரத்து தொடர்கிறது. இதன் காரணமாக குட்கா, ஜர்தா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை மட்டுமே தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்பதால் வருவாய்த் துறை, வணிக வரித்துறை, காவல்துறை, கல்வித்துறை உட்பட 10க்கும் மேற்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில், மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்களும் மாதந்தோறும் கூடி குட்கா தடுப்பு குறித்து கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டது. கலெக்டர் தலைமையிலான இந்தக் குழுக்களும் இதன் விற்பனையை தடுக்க ஆர்வம் காட்டவில்லை. ஒருங்கிணைப்புக்குழு கூட்டமும் ஓரிரு மாதங்களோடு முடங்கியது. குட்கா விற்பனைக் கடைகள், வியாபாரிகளை அடையாளம் கண்டு கொண்டு, மாதம் தோறும் மாமூல் வசூலிப்பதில் போலீசாரும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் கவனம் செலுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், குட்கா, ஜர்தா வகைகள் தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சத்துணவு தர பரிசோதனை, குடிநீர் தர பரிசோதனை என, அடுத்தடுத்த பணிகள் வருகின்றன. போதிய ஆட்களும் இல்லாததால், குட்கா தடுப்பில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் தமிழகம் முழுவதும் கண்காணிப்பை தொடர்ந்து வருகிறோம் என்றார். மக்களின் நலன் கருதியே, குட்கா, ஜர்தாவுக்கு அரசு தடை விதித்தது. அதே அக்கறையோடு, பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து தடையை மீறி குட்கா விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்

Categories: NEWS
%d bloggers like this: