Home > DISTRICT-NEWS, Thanjavur > ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள காலாவதி பொருட்கள் பறிமுதல்

ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள காலாவதி பொருட்கள் பறிமுதல்

23,April, 2016

தஞ்சை பகுதியில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள காலாவதிபொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தஞ்சை பகுதியில் உள்ள கடைகள், உணவகங்கள், மளிகை கடைகள், பழக்கடைகள், குளிர்பான கடைகளில்  மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உணவு பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ரமேஷ்பாபு தலைமையில் அதிரடி ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் மற்றும் சுற்று பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரெங்கநாதன்,  ராஜ்குமார், குமார், வடிவேல், கார்த்திக், சந்திரமோகன், ராமநாதன், மகேஷ்,  கோபாலகிருஷ்ணன், கௌதமன், விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி, மகாதேவன், உமாகேசன்  ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் தயாரிப்பு  தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாத 20 லிட்டர் தண்ணீர் கேன்கள், தடை  செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, காலாவதியான குளிர்பானங்கள், கலப்பட  டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டு முறையாக மாநகராட்சி குப்பை கிடங்கில்  கொட்டி அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1.50  லட்சமாகும்.இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு  கூறும்போது, உணவு வணிகர்கள், விற்பனையாளர்கள் விற்பனை செய்யப்படும் உணவு  பொருள்களை சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு  பொருள்கள் பயன்பாட்டு காலம் அடங்கிய தகவல்களை தெளிவாக அச்சிடப்பட்ட  பொருட்களை வியாபாரம் செய்ய வேண்டும் என்றார். மேலும் கோடைக்காலம் என்பதால்  பொதுமக்கள் குடிநீர், குளிர்பானங்கள், உணவு பொருள்கள் வாங்கும்போது  தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதியை பார்த்து வாங்கி பயன்படுத்த  வேண்டும் என்றார்.

Categories: DISTRICT-NEWS, Thanjavur
%d bloggers like this: