Home > NEWS > ஜவ்வரிசியில் கெமிக்கல் கலப்படம் பாயசத்தில் பாய்சன்!- குங்குமம் டாக்டர்

ஜவ்வரிசியில் கெமிக்கல் கலப்படம் பாயசத்தில் பாய்சன்!- குங்குமம் டாக்டர்

28,April, 2016

தேவை அதிக கவனம்

பாலில் தண்ணீர்… மிளகில் பப்பாளி விதை… காபி தூளில் சிக்கரி என சின்னச் சின்னதாகத் தொடங்கிய உணவுப் பொருள் கலப்படம், இன்று அபாயகரமான வேதிப்பொருட்களை கலக்கும் அளவு விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் ஜவ்வரிசி கலப்படம்!
‘பளிச்’ வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான வேதிப் பொருட்களை ஜவ்வரிசியில் கலப்பது சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியை உருவாக்கியது. மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சேலம், நாமக்கல் உள்பட பல மாவட்டங்களில் உள்ள ஜவ்வரிசி ஆலைகள் சீல் வைக்கப்பட்டன.
பிரச்னை நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சென்ற பிறகு, ‘உணவுப் பாதுகாப்பு துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. ‘மக்களின் உடல்நலம் பாதிப்பதோடு ஜவ்வரிசி தொழிலே அழியும் சூழ்நிலை உள்ளதால் நீதிமன்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கை இப்போது
மீண்டும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஜவ்வரிசி கலப்பட மோசடிகளை வெளிக்கொண்டு வந்ததுடன், அதிரடியான பல நடவடிக்கைகள் எடுத்து வரும் உணவு பாதுகாப்பு அலுவலரான அனுராதாவிடம் பேசினோம்.
‘‘ஜவ்வரிசி கலப்படம் தொடர்பாக விவசாயிகள் தொடர்ந்திருக்கும் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதிகாரி என்ற முறையில் நானும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறேன். அதனால், இப்போது கருத்து எதுவும் கூற முடியாது. ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். அதிக வெண்மையாக இருக்கும் ஜவ்வரிசியை மக்கள் வாங்காமல் தவிர்க்க வேண்டும். ஜவ்வரிசியை பயன்படுத்தும்போது தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, அந்தத் தண்ணீரை வடிகட்டிய பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது’’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
அரசு தரப்பில் தொடர்ந்து விசாரித்தபோது, பெயர் விவரங்களைக் குறிப்பிட வேண்டாம் என்று அதிகாரி ஒருவர் சில விவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். ‘‘ஏறக்குறைய 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜவ்வரிசி தொழில் நடந்து வருகிறது. மரவள்ளிக்கிழங்கு அதிகம் உற்பத்தியாகும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஜவ்வரிசி ஆலைகள் நிறைய இயங்கி வருகின்றன. இந்த மாவட்டங்களில்தான் இப்போது கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக, மரவள்ளிக்கிழங்கின் மேல் தோலை அகற்றிவிட்டே ஜவ்வரிசி தயாரிக்கத் தொடங்குவார்கள். கிழங்கின் தோலை கைகளாலேயே அகற்றிவிட்டு ஜவ்வரிசி முன்பு தயாரிப்பார்கள். இப்போது எந்திரங்கள் பயன்படுத்தித் தோலை அகற்றுகிறார்கள். ஆனால், கிழங்கின் தோலை முழுமையாக அகற்றுவதில்லை. கிழங்கின் தோலில் ஸ்டார்ச் இருக்கிறது என்பதுடன் தோலை முழுமையாக அகற்றாதபோதுதான் எடை கூடுதலாகக் கிடைக்கும் என்பதால், அரைகுறையாகவே தோலை அகற்றி தயாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
கிழங்கின் தோலை முழுமையாக அகற்றிவிட்டு தயாரிக்கும்போதே சிறிது பழுப்பு நிறத்தில்தான் ஜவ்வரிசி கிடைக்கும். தோல் பகுதி முழுமையாக அகற்றாதபோது இன்னும் அதிக பழுப்பு நிறமாகவே இருக்கும். இதனால், வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய அமிலங்களையும் வேதிப்பொருட்களையும் கலக்கிறார்கள். குறிப்பாக, 2000ம் ஆண்டுக்குப் பிறகுதான் வேதிப்பொருட்கள், அமிலங்கள் போன்றவற்றைக் கலந்து தயாரிக்க ஆரம்பித்தார்கள். கால்சியம் ஹைபோகுளோரைட், சோடியம் போன்ற பிளீச்சிங் ஏஜென்டுகளையும், சல்ப்யூரிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், பாஸ்போரிக் அமிலங்களையும், டினோபால் என்ற பவுடரையும் வெண்மைக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
ஜவுளித்துறையில் துணிகளை வெண்மை நிறமாக்கப் பயன்படும் வேதிப்பொருட்கள் இவை. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சில ஜவ்வரிசி ஆலைகளில் நடத்திய சோதனைகளில் இந்த வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது செய்திகளாக வெளியாகியிருக்கிறது.  பாயசம், அப்பளம், வடகம் உள்பட பல உணவுப் பொருட்களில் ஜவ்வரிசியைப் பயன்படுத்தி வருகிறோம். தென்னிந்தியாவில் அரிசியை அதிகம் பயன்படுத்துவது போல மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற வடமாநிலங்களில் ஜவ்வரிசியை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
விரத காலங்கள், விசேஷங்கள் போன்றவற்றில் ஜவ்வரிசி அதிகம் பயன்படுத்தும் பொருளாக இருக்கிறது. ஜவ்வரிசி பயன்பாடு இத்தனை முக்கியமானதாக இருக்கும்போது, இந்த வேதிப்பொருட்கள் எத்தகைய ஆபத்தை உருவாக்கும் என்பதை உற்பத்தியாளர்கள் உணர்வதில்லை. உற்பத்தியாளர்கள் முறையாகத் தயாரித்தாலும், வெண்மை நிறம் கொண்டதாக இருந்தால்தான் விற்பனையாகும் என்று வியாபாரிகள் உற்பத்தியாளர்களை நிர்ப்பந்திப்பதும் நடக்கிறது. ஏற்கெனவே, ஜவ்வரிசி தயாரிப்பில் ஈர மாவு, மக்காச்சோள மாவு கலப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. இப்போது பெரும் பிரச்னையாக வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன.
முழுக்க வியாபாரம் என்ற எண்ணத்தில் மட்டுமே பார்க்காமல் பலரும் விரும்பி உண்ணும் ஓர் உணவுப்பொருள் என்பதையும், சேர்க்கப்படும் வேதிப்பொருட்களின் அபாயகரமான பின்விளைவுகளையும் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் உணர வேண்டும். இந்தத் தவறை உற்பத்தி அளவிலேயே அரசாங்கம் தடுக்க வேண்டும். முறைப்படி தயாரித்தால் எந்த வேதிப்பொருளும் கலக்காமலேயே தரமான ஜவ்வரிசியை தயாரிக்க முடியும்’’ என்கிறார் அவர்.
ஜவ்வரிசியில் இதுபோல் வேதிப்பொருட்கள் கலப்பதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்று இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை மருத்துவரான கணேஷிடம் கேட்டோம்.‘‘உணவு ஆரோக்கியமானதாக இருந்தால்தான் உடல் இயல்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஆரோக்கியக்கேடான உணவுப்பொருட்கள் உள்ளே சென்றால் பசியின்மை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிற்றுப் புண் என்று வயிறு தொடர்பான பல பிரச்னைகள் ஏற்படும். அதுவும் இந்த ஜவ்வரிசியில் கலக்கப்படும் வேதிப்பொருட்கள் இன்னும் ஆபத்தானவை.
வேதிப்பொருட்களின் கலப்படத்தால் உணவை கிரகிக்கும் தன்மை குடலுக்குக் குறையும், ரத்தசோகை ஏற்படலாம், எடை இழப்பு, நீரிழிவு இருந்தால் பருமன், புற்றுநோய் என பல அபாயகரமான பின் விளைவுகள் உருவாகலாம். எல்லா உணவும் கல்லீரலில் சென்று தான் செரிமானமாகிறது என்பதால் கல்லீரல் கோளாறுகளை இந்த ரசாயனங்கள் கண்டிப்பாக உருவாக்கும். கல்லீரலில் என்சைம்கள் உற்பத்தியும் அதீதமாக நடக்கலாம். ஹெவி மெட்டல்கள் என்று சொல்லக்கூடிய கடினமான வேதிப்பொருள் கலப்படம் என்றால் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
இப்போது சில நோய்களுக்கான காரணங்களை மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அடையாளம் தெரியாத குழப்பத்தில் உணவுக் கலப்படம் முக்கிய காரணமாக  இருக்கலாம். கலப்பட ஜவ்வரிசி உணவுகளை குழந்தைகள் சாப்பிடும்போது அவர்களின் இயல்பான வளர்ச்சி பாதிக்கும். மந்தத்தன்மை, எரிச்சல், கவனக்குறைவு என்று பல புதிய பிரச்னைகளை
குழந்தைகளிடம் இப்போது பார்க்கிறோம். இதற்கும் உணவுப்பொருள் கலப்படம் முக்கிய காரணமாக இருக்கக்கூடும்’’ என்கிறார்.
வேதியியல் பேராசிரியரான உஷாவிடம் இந்த வேதிப்பொருட்களின் தன்மை பற்றிக் கேட்டோம்.
‘‘நம்முடைய  வயிற்றுக்குள் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் செரிமானத்துக்கு உதவி செய்கிறது. நேரம் தவறி சாப்பிடுகிறவர்களுக்கு இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகமாக சுரந்து குடல் பகுதியில் எரிச்சலையும், புண்ணையும் உருவாக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஜவ்வரிசியில் கலக்கப்படுகிற மேற்கண்ட வேதிப்பொருட்கள், நம்முடைய வயிற்றில் இயற்கையாக உருவாகும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைவிட பல மடங்கு வீரியம் கொண்டவை.
சாதாரணமாக ஒரு சோப்பில் இருக்கும் வேதிப்பொருட்கள் அலர்ஜியானாலே அரிப்பு, தோல் உரிதல், புண் போன்றவற்றை
உண்டாக்கிவிடுகிறது. ஆப்டிக்கல் ஒயிட்னர் போன்ற வேதிப்பொருட்கள் உடலின் உள்ளுறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்க ஆரம்பித்துவிடும். ஆரம்பகட்டத்தில் இது நமக்குத் தெரியாது. மிகவும் மெலிதாக இருக்கும் ரத்தநாளங்கள் அரிக்கப்பட்டு ரத்த வாந்தி வரும்போதுதான் பிரச்னை புரிய ஆரம்பிக்கும்’’ என்று திகில் கிளப்புகிறார்.
கன்ஸ்யூமர் அசோசியேஷன் அமைப்பின் தொடர்பு அலுவலரான சோமசுந்தரம் மேலும் பல முக்கிய தகவல்களைக் கூறுகிறார்.
‘‘மருத்துவமனையில் காயங்களுக்குக் கட்டு போடுவதற்காக வெள்ளை நிற பேண்ட் எய்ட் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். இந்த பேண்ட் எய்ட் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஆப்டிக்கல் ஒயிட்னர் என்ற வேதிப்பொருளைப் பயன்
படுத்தித் தயாரிக்கிறார்கள்.
ஆனால், இந்த ஆப்டிக்கல் ஒயிட்னர் புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் கொண்டது என்பதால் காயங்களின் மீது நேரடியாகக் கட்டக் கூடாது என தடை செய்யப்பட்டிருக்கிறது. ஜவுளித்துறையில் வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் இந்த ஆப்டிக்கல் ஒயிட்னர்தான் ஜவ்வரிசியில் கலக்கப்படுகிறது என்பது மிகவும் கொடுமையான ஒரு செய்தி. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரியான அனுராதா போலவே எல்லோரும் நேர்மையாக செயல்பட்டால்தான் இதுபோன்ற உணவுக் கலப்பட மோசடி
களை தடுக்க முடியும்.
ஜவ்வரிசி மோசடி வெளிவந்தபிறகு அவருக்கு பல மிரட்டல்கள் வந்ததாகவும், பல அரசியல் தலையீடுகள் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது. அவரை வேறு துறைக்கு மாற்றம் செய்தபோதும் நீதிமன்றம் சென்று போராடி மீண்டும் அதே பணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். இந்த தைரியமும், உறுதியும் எல்லா அதிகாரிகளிடமும் இருந்தால் மோசடிகள் நடக்காமல் தடுக்க முடியும்.
நுகர்வோர் அமைப்பின் மூலமும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அதுவரை, மக்கள் கவனமாக இருக்க வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார் சோமசுந்தரம். மக்களின் உயிருக்கு உலை வைக்கிற, ஜவ்வரிசி தொழிலை நம்பியிருக்கிறவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்குகிறஇந்த மோசடிக்கு நீதிமன்றமும், அரசும் விரைவில் முடிவுரை எழுதும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்!

Categories: NEWS
%d bloggers like this: