Home > NEWS > திருவிழாவில் தீவிர விற்பனையில் ‘ஜெல்லிபால்’ குழந்தைகளின் பாதுகாப்பு ‘அம்பேல்’

திருவிழாவில் தீவிர விற்பனையில் ‘ஜெல்லிபால்’ குழந்தைகளின் பாதுகாப்பு ‘அம்பேல்’

29,April, 2016

உடுமலை : குழந்தைகளின் சுவாசத்தை பாதித்து, உயிரிழப்பு வரை கொண்டு செல்லும், அரசால் தடைவிதிக்கப்பட்ட ‘ஜெல்லி பால்ஸ்’களின் விற்பனை உடுமலை குட்டைதிடலில் நடக்கிறது; பாதிப்புகளை தடுக்க, சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது.

குழந்தைகளை வெகுவாக கவரும் வகையில் அவர்களின் உடல்நலத்தை பாதிக்கும் பல்வேறு பொருட்கள், லாபத்துக்காக சந்தைப்படுத்தப்படுகின்றன.

அதில், உடல்நலத்தை பாதிக்கும் வேதிப்பொருட்கள் கலந்து, ஆபத்தானதாக இருந்தாலும், குழந்தைகளுக்கு, அவை பிடித்தமானதாகவே இருக்கின்றன.

விபரீதம் புரியாமல் பல பெற்றோரும் குழந்தைகளுக்கு இவ்வகை பொருட்களை வாங்கி தருகின்றனர். அப்படியாக, சந்தைக்கு கடந்த, 1998 ல் குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டு பொருளாக வந்ததுதான் ‘ ஜெல்லி பால்ஸ்’ இவற்றை, தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைப்பதால் பெரியதாகி

விடுகிறது.

பலவிதமான வண்ணங்களில் விற்கப்படும் இதனை மீன் தொட்டிகளில் போட்டு வைக்கவும், அழகு பொருட்களாக பயன்படுத்தவும் விற்பனை செய்யப்பட்டது.

சில ஆண்டுகளில் குழந்தைகள் இதனை வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

உடுமலை சுற்றுப்பகுதியில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இந்த பால்களை, தண்ணீர் பாட்டில்களில் போட்டு வைத்து, விளையாட்டு காட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஜெல்லி மிட்டாய்களை போல இருப்பதால், இவற்றை சாப்பிடவும் செய்துள்ளனர். கடந்த, 2007 ல் நடந்த இந்நிகழ்வுகளால், பல குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், ‘பால்’களை ஆய்வுக்கு உட்படுத்த, உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரை செய்தனர்.

ஆய்வில், இதில் பாலிவினைல் க்ளோரைட் வேதியியல் பொருட்கள் கலந்திருப்பதும். இதற்கு தண்ணீரை உறுஞ்சி குறைந்தபட்சம், 400 முறை பெரிதாகும் தன்மை உடையது என தெரியவந்துள்ளது.

இவற்றை உட்கொள்வதால், உடலில் உள்ள நீரை முழுமையாக உறிஞ்சி, உடலுக்கான நீரோட்டத்தையும், சுவாசத்தையும் தடை செய்து, உயிரிழப்பை ஏற்படுகிறது. இதனால்,நாடு முழுவதுமே இதன் விற்பனைக்கு அரசு தடைவிதித்தது.

தற்போது உடுமலை மாரியம்மன்கோவில் திருவிழாவையொட்டி, குட்டை திடலில் பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கடைகள் போடப்பட்டுள்ளன. விற்பனையில், ‘ஜெல்லி பால்களும் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகும் முன்பு, சுகாதாரத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

பெற்றோரே உஷார்…

இவ்வகை பொருட்கள், விற்பனை ஓரிரு நாட்களாகவே நடப்பதால், குழந்தைகளும் வாங்கி சென்றுள்ளனர்.

உடல்நலத்தை உருக்குலைத்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் இந்த ‘பால்ஸ்’களை தவறாக பயன்படுத்தும் முன்னர், உடனடியாக அகற்ற வேண்டும். குடிநீரில் போட்டு குடிப்பதையும், மிட்டாய்களாக நினைத்து உட்கொள்வதை பெற்றோர் தடுக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories: NEWS
  1. 30,April, 2016 at 6:15 am

    Reblogged this on PesPro.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: