Home > NEWS > உணவு பாதுகாப்பு சட்டத்தின் லட்சியம் நிறைவேறுமா?

உணவு பாதுகாப்பு சட்டத்தின் லட்சியம் நிறைவேறுமா?

5,May, 2016

நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான உணவு வழங்கப்பட வேண்டும் என்ற

உயரிய நோக்கத்துடன், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், மத்திய

அரசால், 2011ல் கொண்டு வரப்பட்டது.

‘நமது நாட்டில் விளைவிக்கப்படும் அடிப்படை உணவுப் பொருட்கள், பயறு வகைகள், காய்கறி, பழங்கள், மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுப் பண்டங்கள், பால், தண்ணீர், குளிர்பானங்கள், உடனடி உணவு வகைகள், உணவகங்களில் வழங்கப்படும் உணவு, பானங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் என அனைத்து வகை உணவுப் பொருட்களிலும், சிறந்த தரம் பேணப்படுதல் வேண்டும்’ என்பது, அந்த சட்டத்தின் உயரிய நோக்கம்.
ஆனால், அந்த சட்டத்தின் பல்வேறு விதிகள், நமது நாட்டில் நிலவும் யதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல் உருவாக்கப்பட்டு விட்டன. வேளாண் பணிகளில், அளவுக்கு அதிகமான ரசாயன உரங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு; நாடு முழுவதும் மனித கழிவுகள்; இதர வகை நச்சுக் கலப்புகளாலும் மாசுபட்ட தண்ணீர், அனைத்து நகரங்களிலும் நிலவும் சுகாதார சீர்கேடு ஆகியவற்றை, அச்சட்டத்தை உருவாக்கியவர்கள்

கவனத்தில் கொள்ளவில்லை.

இதன் விளைவாக, இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த இயலாத நிலை நிலவுகிறது. ‘குறைபாடுகளை குறிப்பிட்டு, பல்வேறு விதிகளில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம், நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் சட்டத்தை அமல்படுத்த முடியும்’ என, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம், 2012ல் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியது.

இதே கோரிக்கையை, உணவுப் பொருட்கள் வணிகம் தொடர்பான பல்வேறு சங்கங்களும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளன. பலமுறை டில்லி சென்று அமைச்சர், உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினோம்.கடந்த ஏப்., 28ல் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் சார்பில் டில்லி சென்று, மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா, இணைச்செயலர் சர்மா, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய தலைவர் ஆசிஷ் பஹுகுணா மற்றும் முதன்மை செயல் அதிகாரி பவன்குமார் அகர்வால் ஆகியோரை சந்தித்து, விரிவான கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

முதன்மை செயல் அதிகாரி பவன்குமார் அகர்வால் மற்றும் இணைச்செயலர் கே.எல்.சர்மா ஆகியோர் சங்க நிர்வாகிகளுடன் விவாதித்தனர். ‘உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம், அதன் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், நடைமுறை மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்-றன’ என தெரிவித்தனர்.

சட்டத்தின் நோக்கம் தண்டிப்பது அல்ல. உரிய விழிப்புணர்வை உருவாக்கி, அனைவரும் ஒருங்கிணைந்து, பாதுகாப்பான உணவு எனும் உயரிய நோக்கத்தை அடையும் வண்ணம் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவு மற்றும் உணவக தொழிலுக்கு இடையூறு செய்பவர்களாக செயல்படுவதை அரசு விரும்பவில்லை. சுய கட்டுப்பாட்டு முறையில் வணிகர்கள் தாமே முன்வந்து சட்டத்தின் லட்சியத்தை நிறைவேற்றும் வண்ணம், இயன்ற அளவு செயல்பட வேண்டும்.

கே.எல்.குமார், இணை செயலர்

தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்

Categories: NEWS
%d bloggers like this: