Home > DISTRICT-NEWS, Villupuram > விழுப்புரத்தில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

விழுப்புரத்தில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

17,June, 2016

 

விழுப்புரம்,
விழுப்புரத்தில் ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பழக்கடைகளில் சோதனை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழக்கடைகளில் ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பழக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், சமரேசன், கதிரவன், முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் விழுப்புரம் எம்.ஜி.சாலை, நேருஜி சாலை, பாகர்ஷா வீதி, திரு.வி.க. வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் உள்ள பழக்கடைகளில் ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.
5 டன் மாம்பழங்கள் பறிமுதல்
அப்போது, செயற்கை முறையில் பழுக்க வைத்து மாம்பழங்களை விற்பனை செய்யக்கூடாது என பழக்கடை வியாபாரிகளிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து, வண்டிமேடு, பூத்தமேடு பகுதிகளில் உள்ள பழக்குடோன்களிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் விழுப்புரம் வண்டிமேடு வள்ளலார் தெருவில் உள்ள ஒரு பழக்குடோனில் இருந்த மாம்பழங்களை சோதனை செய்ததில் ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 5 டன் எடையுள்ள மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மாங்காய்களை பழுக்க வைப்பதற்காக பயன்படுத்திய 5 கிலோ ரசாயன கற்களையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அறிவுரை
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைத்து மாம்பழங்களை விற்பனை செய்வதால் அதை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும். எனவே இதுபோன்ற மாம்பழங்களை விற்பனை செய்யாதீர்கள். அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரை வழங்கினார்கள். 

Categories: DISTRICT-NEWS, Villupuram
%d bloggers like this: