Home > DISTRICT-NEWS, Villupuram > தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பலான புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பலான புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

18,June, 2016

 

விழுப்புரம்,

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், 2 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

அதிரடி சோதனை

விழுப்புரம் நகரில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், முருகன், சமரேசன், கதிரவன், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, நேருஜி சாலை ஆகிய இடங்களில் உள்ள 15–க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்மசாலா ஆகியவை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு 450 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றில் அதிகளவில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக விழுப்புரம் நேருஜி வீதியில் உள்ள ஒரு கடையையும், பாகர்ஷா வீதியில் உள்ள ஒரு கடையையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

தொடர்ந்து, நடத்திய சோதனையில் தரமற்ற முறையிலும் நிறமேற்றப்பட்ட வகையிலும் தயார் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 50 கிலோ எடையுள்ள உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், உணவுப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

இதையடுத்து இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு மினி லாரியில் ஏற்றி மாவட்ட கலெக்டர் அலுவலக பின்புறம் உள்ள ஒரு காலியிடத்திற்கு கொண்டு வந்து அவற்றை கீழே கொட்டி தீ வைத்து அழித்தனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram
%d bloggers like this: