Home > NEWS > அர்த்தமுள்ள மாற்றம் ஆரம்பம்!-விகடன்

அர்த்தமுள்ள மாற்றம் ஆரம்பம்!-விகடன்

20,June, 2016

 

தஞ்சாவூர் மாவட்ட கருவூலத்துக்கு தனது உறவினரைப் பார்ப்பதற்காக ராஜேந்திரன் சென்றார். அன்றைய தினம் கருவூலத்தில் நிறையக் கூட்டம். நூற்றுக்கணக்கான முதியவர்கள் வெயிலில் வரிசையில் நின்றிருந்தனர். அத்தனை பேரும் முன்னாள் அரசு ஊழியர்கள். ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கருவூலத்துக்கு நேரில் வந்து கையொப்பம் இடவேண்டும், வரத் தவறினால், ஓய்வூதியம் கிடைக்காது. வெயில் காலத்தில் வைக்கப்பட்டிருக்கிற இந்த நேர்காணலுக்கு வந்திருந்த ஒவ்வொருவருடைய முகத்திலும் அத்தனை சோர்வு.
ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், அதிகாரிகள் என எல்லோருமே சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்தவர்கள். ஆனால், அத்தனை பேரும் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் கவலையோடு காத்திருந்தனர். முதியவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வயதுக்கான, அனுபவத்துக்கான, வகித்த பதவிக்கான மரியாதைகூட இல்லாமல் கால்கடுக்கக் காக்கவைக்கப்பட்டனர்; ஊழியர்களின் கடுமையான அர்ச்சனைக்கும் கடும்சொல்லுக்கும் உள்ளாகினர்.
80-90 வயதுள்ள அந்த வயதான மனிதர்களை அப்படி ஒரு நிலையில் பார்த்தது, ராஜேந்திரனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது உறவினரிடம், `ஏன் இப்படி?, இதை எல்லாம் யாரும் கேட்க மாட்டீர்களா?’ என்று கோபமாக விசாரித்தார். உறவினரோ, `இங்கே எல்லாம் இப்படித்தான், எதையும் சரிசெய்ய முடியாது’ என்று விரக்தியாக பதில் சொல்லியிருக்கிறார். ராஜேந்திரன், கருவூல அதிகாரியைச் சந்திக்க முயற்சிசெய்தார். ஆனால், அவரைச் சந்திப்பது அத்தனை எளிதானதாக இல்லை. சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு மணிக்கணக்கில் காத்திருந்தால், அதிகாரி பிரியப்பட்டால் சந்திப்பார் என்பதுதான் நிலைமை என்பதைப் புரிந்துகொண்டார். அந்த நொடியில் ராஜேந்திரன் முடிவெடுத்தார்… `இதே அலுவலகத்துக்கு கருவூல அதிகாரியாக ஆகவேண்டும்.’
தடாலடியான முடிவுதான். இருந்தாலும் ராஜேந்திரன் அதற்காக அடுத்த நான்கு ஆண்டுகள் உழைக்கவேண்டியிருந்தது. இன்று அதே தஞ்சாவூர் அலுவலகத்தில் கருவூலத் துறை அதிகாரியாக இருக்கிறார். எந்த அலுவலகத்தை மாற்ற வேண்டும் என விரும்பினாரோ… அங்கே தான் விரும்பிய அத்தனை மாற்றங்களையும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். ஓர் அலுவலகத்தை அன்பான, நேர்மையான, வந்தோர் வாழ்த்தும் இடமாக மாற்றிக்காட்டியிருக்கிறார். நம்முடைய அரசு அலுவலக நடைமுறையில் இது மிகப் பெரிய சாதனை.

“தலைமைச் செயலகத்தில் பணியாற்றுகிற காலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான டேவிதாருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்தான் எனக்கு, பணியில் நேர்மை, நம்மை நாடி வருபவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும், மரியாதைக்குறைவுடன் யாரையும் நடத்தக் கூடாது என்பதை எல்லாம் கற்றுத்தந்தவர். அவரைப் போன்ற பல திறமையான, நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் என்னை உருவாக்கினார்கள்” எனும் ராஜேந்திரன், ஜூலை 2015-ம் ஆண்டில் கருவூல அதிகாரியாக பணியில் அமர்ந்தார்.
அலுவலகம் இயங்கும் விதங்களை, சில மாதங்கள் பொறுமையாகக் கவனிக்க ஆரம்பித்தார். சுமார் 200 பணியாளர்களின் பணித்திறன் குறித்து ஆய்வுசெய்தார். கணினி அறிவுள்ள, ஆர்வமுள்ள, நேர்மையான இளைஞர்களை ஓய்வூதியப் பிரிவுக்கு மாற்றம் செய்தார்.
ஒருபக்கம் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் முடங்கிக் கிடந்தன. இன்னொரு பக்கம் இறந்துபோன மனிதர்களுக்கும் ஓய்வூதியம் தரப்பட்டது. ராஜேந்திரனுக்கு முன்னால், மலையளவு வேலைகள் குவிந்திருந்தன. ஒவ்வொரு வேலையாகச் சரிசெய்யத் தொடங்கினார்.
முதல் வேலையாக அலுவலகங்களில் தன் சொந்தச் செலவில் சிசிடிவி கேமராவைப் பொருத்தினார். இதன் மூலம் யாராவது பணம் கேட்டாலோ, கொடுத்தாலோ அதைக் கண்டுபிடிக்க முடிந்தது. “ஓய்வூதியத்துக்கான நேர்காணலுக்கு ஒரு பெண் வந்திருந்தார். அலுவலக வாசல் வரை பூவும் பொட்டுமாக வந்தவர், உள்ளே வரும்போது அதையெல்லாம் அழித்துவிட்டு தாலியை மறைத்துக்கொண்டு விதவைபோல உள்ளே வந்தார். அவருடைய இறந்துபோன கணவருக்கான ஓய்வூதியத்தை வாங்கிக்கொண்டிருந்தவர் அவர். மறுமணம் செய்துவிட்டதால், இனி பென்ஷன் கிடைக்காது. ஆனால், அதை மறைத்து பல ஆண்டுகளாக பணம் வாங்கிக் கொண்டிருந்தார். சிசிடிவி கேமராவால்தான் சிக்கினார்” என்கிறார் ராஜேந்திரன்.
இப்படி போலி ஆவணங்கள் கொடுத்தும், செத்துப்போனவர்களை உயிரோடு இருப்பதாக ஏமாற்றியும் என ஏகப்பட்ட மோசடிகள். ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்திருக்கிறார். அனைவரும் அரசு அதிகாரிகள். அவர்களில் சிலர் இறந்த பின்னரும் அவர்களது ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக வாங்கிக்கொண்டு ஜாலியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். தஞ்சாவூரில் மட்டும் கிட்டத்தட்ட பல லட்சங்களில் இப்படி ஏமாற்றியிருக்கிறார்கள். எல்லோரையும் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார்.
அலுவலகத்துக்கு வருகிறவர்களிடம் எப்படி இன்முகத்தேடு இருப்பது, அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது, குறைகளை எப்படி உடனடியாகத் தீர்ப்பது என்பதெல்லாம் ஒவ்வோர் அலுவலருக்கும் முறையாகக் கற்றுத்தரப்பட்டன. வருகிறவர்கள் தங்களுடைய குறைகளை எழுதிக்கொடுக்க கடிதம்தான் ஒரே வழிமுறையாக இருந்தது. அதை மாற்றி, எளிமையான ஒரு படிவம் தயார் செய்துவைத்திருக்கிறார் ராஜேந்திரன்.

“வயசான பெரியவங்க உட்கார்ந்து கடிதம் எழுத மிகவும் சிரமப்படுவார்கள். அதை எளிமையாக்கினோம். சில குறைகளை படிவத்தில் உள்ள கட்டங்களை டிக் அடிச்சு அவங்க பேரும், அக்கவுன்ட் நம்பரும் கொடுத்தாகூட போதும் என நிலைமையை மாற்றினோம்” என்கிறார் ராஜேந்திரன். ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்க்க புதன்கிழமைதோறும் முகாம்களை நடத்துகிறார். விண்ணப்பங்கள் கொடுத்தால், அதற்கு ஒப்புதல் சீட்டு ஒன்றை ஓய்வூதியர்களுக்கு வழங்குகிறார்கள். அந்த விண்ணப்பங்கள் மூன்று நாட்களில் பார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு, உடனடியாக செயல்படுத்தப்படுகிறது.
அலுவலகத்துக்கு வரும் வயதானவர்கள் உட்காருவதற்கு ஏராளமான நாற்காலிகளை வங்கி ஒன்றிலிருந்து ஸ்பான்சர் பெற்றும், தொண்டு நிறுவனம் மற்றும் சமூகநல ஆர்வலர்களிடம் இருந்தும் வாங்கிப் போடப்பட்டுள்ளது. குடிப்பதற்காக தண்ணீரும், காத்திருப்பவர்களுக்கு பிஸ்கட்டும் வழங்கப்படு கின்றன. நடக்க முடியாதவர்கள் வந்தால் வீல்சேர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
“நேரில் வர முடியாதவர் களை அவரவர் வீட்டுக்கே சென்று அவர்களுக்கு உதவும்போது சிலர் தங்களிடம் இருக்கிற 50, 100 ரூபாய் தாளை எடுத்து நீட்டுவார்கள். அப்போது மனம் உடைந்து விடும்” என்கிறார். இந்த ஆண்டு முதல் எல்லா ஓய்வூதிய தாரர்களுக்கும் ஆதார் எண் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், பல பென்ஷனர்களுக்கு ஆதார் அட்டை இல்லை. உடனே ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டார். இந்த அதிரடியான மாற்றங்களால் முன்னர் எல்லாம் பல மணி நேரம் பிடிக்கிற நேர்காணல்கள், இப்போது நிமிடங்களில் முடிந்துவிடுகின்றன. வருகிற அனைவரிடமும், பொறுமையாக அலுவலர்கள் பதில் சொல்கிறார்கள்; அவர்களுடைய குறைகளைக் கேட்கிறார்கள். அன்றே, அப்போதே அவை தீர்க்கப்படுகின்றன.

“தங்களுக்கான உதவிகள் எந்தவித லஞ்சமும் அலைக்கழிப்பும் கடுஞ்சொற்களும் இல்லாமல் கிடைக்கும்போது மனமார வாழ்த்துகின்றனர். அந்த ஆத்ம திருப்தி ஒண்ணு போதும்” எனப் புன்னகைக்கும் ராஜேந்திரன், “இந்த மாற்றத்துக்கு முழுக்காரணம் என்னோடு வேலைசெய்த பணியாளர்கள்” என நெகிழ்கிறார்.
அரசு அலுவலகங்களில் இன்முகத்தேடு வரவேற்கிற அதிகாரிகளும், விரைந்து குறை தீர்க்கிற ஒரு நிர்வாகமும் நம் எல்லோருக்குமே கனவு. அதைச் சாத்தியமாக்குவதற்காக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி, அதில் சாதித்தும் காட்டியிருக்கிறார் ராஜேந்திரன். அவருடைய பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது. விரைவில் தலைமைச் செயலகப் பணிக்கே அவர் திரும்பிவிடுவார். ஆனால், அவர் கடந்த ஒரு வருடமாகக் கட்டி எழுப்பி இருக்கிற இந்த மாற்றத்தை, அவருக்குப் பிறகு வரும் அதிகாரி முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதுதான் அர்த்தமுள்ள மாற்றமாக இருக்கும். அந்த மாற்றம், தமிழகம் முழுக்க எல்லா அரசு அலுவலகங்களுக்கும் கொண்டுசேர்க்கப்பட வேண்டும்.

Categories: NEWS
 1. 20,June, 2016 at 7:39 pm

  It is a lesson to other STO / DTOs

 2. Dr.G.Palani, M.D., B.S.Sc.
  21,June, 2016 at 8:28 am

  இந்த சாதனைகளை செய்ய அவர் எவ்வளவு எதிர்ப்புகளையும் புறம்கூறுதலையும் சந்தித்திருப்பார் என எண்ணும் போது வருத்தமாக இருக்கிறது.

  (அப்படி ஏதும் இல்லையெனின் வியப்புதான்………..அனைவர்க்கும் வாழ்த்துதான்).

  ஒருவர் மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள், அவர் மாறுதலானவுடன் அவையும் காணாமல் போயிருக்கும், இதுதான் அரசு அலுவலக நிர்வாகத்தின் சாபக்கேடு.

  நான் ஒரு மாவட்டத்தின் அலுவலராக இருந்து செய்த சில முயற்சிகள் என்னோடு போயின.

  அலுவலக கண்காணிப்பாளர் எடுத்து சொல்லியும்……..அப்ப அவர்……….இப்ப நான் என்று ஒரே வரியில் அனைத்தும் காணாமல் போயின.

  சரி, திரு ராஜேந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழத்துக்கள்.

  புதிதாய் பொறுப்பேற்ற ஒரு கிராம நிர்வாக அலுவலரும் (பெண்) இதேபோல பணியாற்றுகிறார் என சமீபத்தில் படித்தேன்.

  இப்படிப்பட்ட மனிதாபிமானமிக்க அலுவலர்கள் பெருக வேண்டும், அதற்கு மேநிலை நிர்வாகமும், அரசியலும் ஒத்துழைக்க வேண்டும்

  அன்புடன்,
  மரு.கோ.பழநி

 1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: