Home > NEWS > சாலையோர கடைகளால் சுகாதாரம் கேள்விக்குறி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

சாலையோர கடைகளால் சுகாதாரம் கேள்விக்குறி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

20,June, 2016

தாம்பரம்: தாம்பரம் நகர் பகுதியில் நாளுக்கு நாள் சுகாதாரமில்லாத உணவு வகைகளை விற்பனை செய்யும் தெருவோர கடைகள் அதிகரித்து வருகின்றன.  இதனால் சுற்றுப்புற சுகாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தாம்பரம் பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்  வசித்து வருகின்றனர். பெரும்பாலான குடும்பங்களில் கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்கின்றனர். தாம்பரத்தை சுற்றிலும் கல்லூரிகள்,  தொழிற்சாலைகள் உள்ளன. பலர் குடும்பத்தைவிட்டு தனியாக அறை எடுத்து தங்கியுள்ளனர்.
காலை 8 மணிக்கு வேலைக்கு செல்லும் இவர்கள் மாலை 7 மணிக்கு தான் வீடு திரும்புகின்றனர். சில நேரத்தில் மிகவும் தாமதமாக வீட்டிற்கு வரும்  இவர்கள் இரவு உணவுக்கு சாலையோர கடைகளையே நம்பியே உள்ளனர். இவர்களை குறிவைத்து சாலையோர கடைகள் ஏராளமாக உருவாகி  வருகின்றன. இந்த கடைகளில் சிலவற்றில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இதை  கண்டுகொள்வதில்லை. உணவு பொருட்கள் அனைத்தையும் பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்து தருகின்றனர்.
சூடு குறையாமல் இருக்க சுடச்சுட பிளாஸ்டிக் பைகளில் உணவு பேக்கிங் செய்கின்றனர். விபரீதம் புரியாமல் மக்களும் அவற்றை வாங்கி செல்கின்றனர்.  இதுதவிர கொளுத்தும் வெயிலில் தாகம் தணிக்க பலரும் இயற்கை பானங்களை விரும்புகின்றனர். இவர்களை குறிவைத்து சாலையில் பழச்சாறு  கடைகளும் ஏராளமாக பெருகி உள்ளன. இந்த கடைகளில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை சரியாக சுத்தம் செய்வதில்லை. ஒரே பாத்திரத்தில் பலருக்கும்  பழச்சாறு தயாரித்து வழங்குகின்றனர். மேலும் இனிப்பு சுவைக்காக தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தப்படுவதாவும் புகார் எழுகிறது.
எனவே, உரிய அனுமதியின்றி செயல்படும் சாலையோர கடைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை   வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், “அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு உரிய அனுமதி பெற்று ஓட்டல் நடத்தி  வருகிறோம். அதிலும் அடிக்கடி சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் எங்களை சிரமப்படுத்துகின்றனர். ஆனால் சாலையோர கடைகளை சோதனை  செய்வதே கிடையாது. விபரீதம் ஏற்பட்டால் அதிகாரிகள் எங்கள் மீதும் சேர்த்துதான் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றனர்.

Categories: NEWS
%d bloggers like this: