Home > NEWS > உணவுப்பொருளில் மாற்றப்படாத எண்ணெய்: மெக்டொனால்டு உணவகத்திற்கு நோட்டீஸ்

உணவுப்பொருளில் மாற்றப்படாத எண்ணெய்: மெக்டொனால்டு உணவகத்திற்கு நோட்டீஸ்

29,June, 2016

ஜெய்ப்பூர்: மெக்டொனால்டு உணவகத்தில், உணவு பண்டங்களில் 16 நாட்களாக ஒரே எண்ணெய் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தானின் பஞ்ச் பட்டியை மையமாக வைத்து செயல்படும் மெக்டொனால்டு உணவகத்தில், உணவு பாதுகாப்பு சட்டப்படி, அதிகாரிகள் கடந்த ஜூன் 17 ம் தேதி சோதனை நடத்தினர். இதனையடுத்து அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசில், உங்கள் உணவகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உணவுப்பொருட்களில், ஜூன் 1 முதல் ஜூன் 16ம் தேதி வரை ஒரே எண்ணெணையை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இது உடல் நலனுக்கு தீங்கானது எனக்குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படும் எண்ணெய் காரணமாக, புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. இதய நோய், கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
நோட்டீஸ் தொடர்பாக மெக்டொனால்டு உணவக அதிகாரிகள் கூறுகையில், உணவுப்பொருட்களில் எண்ணெய் பயன்படுத்துவது குறித்து இந்தியாவில் எவ்வித தெளிவான சட்டங்களும் இல்லை. ஆனால், எங்களை பொறுத்தவரை தரம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த நடைமுறைகளை முறையாக பின்பற்றி வருகிறோம் எனக்கூறினர்.
ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மெக்டொனால்டு உணவகத்தில் பாமாயில் எண்ணெய் நீண்ட நாட்களாக மாற்றப்படவில்லை. இதனால், எண்ணெய் கருப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. இதனை தான் உணவுப்பொருட்களில் பயன்படுத்தியுள்ளனர். 16 நாட்களாக எண்ணெய் மாற்றப்படவில்லை என்றனர்.

Categories: NEWS
%d bloggers like this: