Home > DISTRICT-NEWS, Erode > ரசாயனம் மூலம் பழுக்க வைத்த ரூ.1 லட்சம் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

ரசாயனம் மூலம் பழுக்க வைத்த ரூ.1 லட்சம் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

29,June, 2016

 

ஈரோடு, ஜூன். 29& ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி மார்க்கெட், கடைகள், பழமுதிர்சோலைகள், தள்ளுவண்டி கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாம்பழங்களை ரசாயனத்தை பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவதாக புகார் எழுந்தது.அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கருணாநிதி தலைமையில் அதிகாரிகள் பூபாலன், முருகன், முத்துகிருஷ்ணன்,சுகாதார ஆய்வாளர் நல்லசாமி ஆகியோர் ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் நேற்று காலை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மாம்பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ள குடோன்களுக்கு சென்று அதிகாரிகள் சோதனையிட்டனர்.இந்த ஆய்வின்போது மாம்பழங்களை கையில் எடுத்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.அதன்பின்னர் மாம்பழங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது? எவ்வளவு நாட்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது? போன்ற விவரங்களை குடோன் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.அதிகாரிகளின் சோதனையில் சில குடோன்களில் மாம்பழங்கள் ரசாயன மருந்தை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து அந்த குடோன் முழுவதும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ரசாயன மருந்து பாட்டில்கள் மற்றும் மாம்பழம் மீது தெளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தெளிப்பான் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதையடுத்து அந்த மாம்பழங்களை அதிகாரிகளை பறிமுதல் செய்தனர்.நேதாஜி மார்க்கெட்டில் சுமார் 30 குடோன்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  இதில் 5 குடோன்களில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான 5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மாம்பழங்களை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் எடுத்து சென்று குப்பையில் கொட்டி அழித்தனர்.  இதுகுறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கருணாநிதி கூறியதாவது: ரசாயன மருந்து கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடும்போது வாந்தி, மயக்கம் மற்றும் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மார்க்கெட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளது. ரசாயனம் பயன்படுத்தப்பட்ட குடோன்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்படும். இதேபோல் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Erode
  1. 30,June, 2016 at 7:03 am

    Reblogged this on PesPro.

  1. No trackbacks yet.
Comments are closed.
%d bloggers like this: