Home > NEWS > ஓட்டல்களில் உணவு பொருள் தயாரிப்பவர்கள், பரிமாறுபவர்கள் தொற்றுநோய் இல்லாதவர்கள் என்பதற்கான மருத்துவச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

ஓட்டல்களில் உணவு பொருள் தயாரிப்பவர்கள், பரிமாறுபவர்கள் தொற்றுநோய் இல்லாதவர்கள் என்பதற்கான மருத்துவச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

16,August, 2016

ஓட்டல்கள், பேக்கரிகளில் உணவுப்பொருள் தயாரிப்பவர்கள், பரிமாறக்கூடியவர்கள் தொற்றுநோய் இல்லாதவர்கள் என்பதற்கான மருத்துவச்சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் என்று கருத்தரங்கில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

201608120239327300_Producing-food-in-hotels-distributor-Quarantine-officers_SECVPF

கருத்தரங்கு

தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பாதுகாப்பு பிரிவு) சார்பில் நாகர்கோவில் நகரில் உள்ள உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு சட்ட கருத்தரங்கு நேற்று நடந்தது. கருத்தரங்கில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் குமாரபாண்டியன் தலைமை தாங்கி, உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து பேசினார். உணவு ஆய்வாளர் சங்கரநாராயணன் உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்க உரையாற்றினார்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–

ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தங்களது உரிமங்களை புதுப்பித்துக் கொள்வதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டது. இனிமேல் உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடிய அனைவருமே லைசென்ஸ் பெற வேண்டும். ஏற்கனவே உணவு கலப்பட தடைச்சட்டத்தின்கீழ் உரிமம் பெற்றிருப்பவர்கள் உணவு பாதுகாப்பு சட்ட உரிமமாக மாற்றிக் கொள்ளலாம். இதுவரை உரிமம் பெறாதவர்கள் புதியதாக உரிமம் பெற வேண்டும்.

தொற்றுநோய் சான்றிதழ்

உணவு உற்பத்திக்கூடங்களை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். ஓட்டல்கள், பேக்கரிகளில் உணவுப்பொருள் தயாரிப்பவர்கள், பரிமாறக்கூடியவர்கள் தொற்றுநோய் இல்லாதவர்கள் என்பதற்கான மருத்துவச்சான்றிதழை 6 மாதத்துக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் விற்பனை நிறுவன உரிமையாளர்கள் பெறவேண்டும்.

ஆயுள் தண்டனை

மனித உயிர்களுக்கு தீங்கிழைக்கும் உணவுப்பொருட்கள் என நிரூபிக்கப்படும் பட்சத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியால் குறைந்தது ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம்வரை சம்பந்தப்பட்ட உணவு விற்பனையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். குற்ற நிகழ்வுகளைப் பொறுத்து அபராத தொகை நிர்ணயிக்கப்படும். அதேசமயம் கோர்ட்டு மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 3 மாதம் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. குற்ற நிகழ்வுகளைப் பொறுத்து தண்டனையின் அளவு இருக்கும்.

இவ்வாறு ஆய்வாளர்கள் குமாரபாண்டியன், சங்கரநாராயணன் ஆகியோர் கூறினர்.

இந்த கருத்தரங்குக்கு குமரி மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஷாஜகான், செயலாளர் சுகுமாரன், பொருளாளர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் அமைப்பாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.

Categories: NEWS
%d bloggers like this: