Home > NEWS > விதிமீறல்!இறைச்சிக் கடைக்குள் ஆடுகள் வதை:சுகாதாரம் பின்பற்றப்படுவதில்லை

விதிமீறல்!இறைச்சிக் கடைக்குள் ஆடுகள் வதை:சுகாதாரம் பின்பற்றப்படுவதில்லை

16,August, 2016

உடுமலை ;இறைச்சிக் கடைகளுக்கு உள்ளேயே, ஆடுகள் வதை செய்யப்பட்டு, ‘சீல்’ வைக்கப்படும் அவலம், உடுமலை நகரில் அரங்கேறி வருகிறது. அனைத்து இறைச்சிக் கடைகளும், சுகாதார விதிகளை கடைபிடிப்பதும் கிடையாது.

உடுமலை நகரில், 48 ஆட்டு இறைச்சிக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மட்டுமின்றி, மாடு, கோழி இறைச்சிக்கடைகள் அனைத்திலும், சுகாதார விதிமுறைகள் சிறிதும் பின்பற்றப்படுவதில்லை. இறைச்சிகள், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கிடைக்கிறதா என்று பொதுமக்களும் அக்கறை கொள்ளாததால், புற்றீசல் போல, கடைகள் பெருகியுள்ளன. உடுமலையில், ஒரே ஒரு இடத்தில் மட்டுமே, ஆடு வதைக்கூடம் செயல்பாட்டில் உள்ளது. இங்கு, நாளொன்றுக்கு, 25 – 30 எண்ணிக்கையிலான ஆடுகள் வதை செய்யப்படுகின்றன. ஆடு ஒன்றுக்கு, 25 ரூபாய் வீதம், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், ஆடு வதைக்கூடத்தில், போதியளவு தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடையாது. இரு தண்ணீர் குழாய் இணைப்பில், ஒன்று பழுதடைந்தும், கழிவுநீர் தேக்கம் அடைந்தும் காணப்

படுகிறது.இதனால், இந்த வதைக்கூடத்தை பயன்படுத்த, இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தயங்குகின்றனர். அதேபோல், மாடு, கோழி இறைச்சிக்கடைகளும், எவ்வித கட்டுப்பாடும் இன்றி, செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இறைச்சி கடைகளுக்கு உள்ளேயே, ஆடுகள் வதை செய்யப்பட்டு, ‘சீல்’ வைக்கப்படும் அவலமும் அரங்கேறி வருகிறது. இறைச்சிக்கடை விதிமுறைகள்

இறைச்சிக்கடைகள் ஒவ்வொன்றும், இடைவெளிவிட்டு அமைந்திருக்க வேண்டும். காய்கறி மார்க்கெட்டுக்கு அருகில் இருக்கக்கூடாது. துர்நாற்றம், புகை, துாசி படியாத இடமாக இருக்க வேண்டும்.

தொழிற்சாலை, குடியிருப்பு பகுதியில் இருந்து, 50 மீட்டர்; வழிபாட்டு ஸ்தலங்களில் இருந்து, 100 மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும். கடைகளில், இறைச்சியை, கறுப்புக் கண்ணாடி பெட்டிக்குள் பூட்டி வைக்க வேண்டும். பெட்டியில் ஒரு பகுதி மட்டும் திறக்கும் வகையில் இருக்க வேண்டும். தரையில் இருந்து, 3 அடி உயரத்துக்கு மேல், இறைச்சியை தொங்கவிட வேண்டும். எளிதில் சுத்தப்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். கழிவுநீர் எளிதாக வெளியேறும் வகையில் இருக்க வேண்டும்.

கடையின் ‘ரேக்’, டேபிள், அலமாரி போன்றவற்றின் மேல்பகுதி, அலுமினியம் அல்லது மார்பிள் அல்லது கிரானைட் கற்கள் கொண்டு அமைத்திருக்க வேண்டும். காற்றோட்டம் இருக்க வேண்டும்.இறைச்சியை வெட்டப் பயன்படுத்தும் கத்தி போன்றவை, துருப்பிடிக்காத ‘ஸ்டீல்’ வகையை சேர்ந்ததாக இருக்க வேண்டும். இறைச்சி வெட்டுவோர், நீண்ட நகம் வளர்த்திருக்கக் கூடாது. காய்ச்சல், வாந்தி, டைபாய்டு, வயிற்றுப்போக்கு உள்ளவராக இருக்கக் கூடாது. இறைச்சி கடைக்குள் புகை பிடித்தல், எச்சில் துப்புதல், புகையிலை பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் வகையில், ஆடு, மாடு, கோழிகளை வதைக்கக் கூடாது. இறைச்சிக்காக, வெட்டப்படும் கால்நடைகளுக்கு, கால்நடை மருத்துவர் சான்று பெற வேண்டும். அந்த சான்றை பொதுமக்கள் பார்வைக்கு படும்படி, வைத்திருக்க வேண்டும். இறைச்சி வெட்டப்பட்ட, ஆறு மணி நேரத்துக்குள் விற்பனை செய்துவிட வேண்டும் என்ற விதிமுறைகள், உணவு பாதுகாப்பு சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், எவரும் விதிமுறைகளை பின்பற்றுவது கிடையாது.

‘விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது’

உணவு பாதுகாப்பு அலுவலர் காமராஜ் கூறுகையில், ”இறைச்சிக் கடைகளில், மாதம் ஒரு முறை, உணவு பாதுகாப்பு அலுவலராலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உணவு பாதுகாப்பு நியமன அலுவலராலும், ஆய்வு நடத்த, உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பகுதியிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சுகாதாரமற்ற இறைச்சிகளை உட்கொண்டால், உடல் நலத்தில் கேடு ஏற்படும். இறைச்சிக்கடை கழிவுகளை, குடியிருப்பு அல்லாத இடத்தில் குழி தோண்டி புதைத்து அழிக்கவும், நோய் பாதிப்புள்ள விலங்குகளின் இறைச்சி, ஈ மொய்க்கும் இறைச்சியை உட்கொள்ளும் போது, வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது,” என்றார்.

Categories: NEWS
%d bloggers like this: