Home > DISTRICT-NEWS, Tiruvannamalai > குடிநீர் கேன், பாட்டில்களில் தயாரிப்பு, காலாவதி தேதியை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பேச்சு

குடிநீர் கேன், பாட்டில்களில் தயாரிப்பு, காலாவதி தேதியை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பேச்சு

19,August, 2016

திருவண்ணாமலை,

குடிநீர் கேன், பாட்டில்களில் தயாரிப்பு, காலாவதி தேதியை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராஜா பேசினார்.

விழிப்புணர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையில் சார்பில் குடிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கைலாஷ் குமார், சுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் ராஜா பேசியதாவது:–

தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் முன்பாக சிறிய தொட்டி அமைத்து அதில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் வைத்திருக்க வேண்டும். சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உள்பட எந்த நபர் சென்றாலும் அந்த தொட்டியில் கால் நனைத்து விட்டு செல்ல வேண்டும்.

நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உள்பட அனைவரும் தொப்பி, முக உறை (மாஸ்க்) கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். சுத்திகரிப்பு நிறுவன ஆய்வகத்தில் பணிபுரியும் நபர்கள் வேதியியல், மைக்ரோ பயாலஜி துறையில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தயாரிப்பு, காலாவதி தேதி

குடிநீர் கேன், பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் போன்றவற்றில் தயாரிப்பு, காலாவதி தேதியை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அதன் பின்னரே நிறுவனத்தை விட்டு வெளியே கொண்டு செல்ல வேண்டும். விதிமுறைகளின் படி செயல்படாத நிறுவனங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், தனியார் சுத்திகரிப்பு குடிநீர் நிறுவன அதிகாரிகள் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற ஒரு மாத கால அவகாசம் அளிக்கும்படி கூறினார்கள்.

%d bloggers like this: