Home > NEWS > தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட அனுமதிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட அனுமதிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி உத்தரவு

19,August, 2016

சென்னை : தமிழகத்தில் ஒட்டகங்கள் வெட்டுவதற்கு அனுமதி இல்லை என்று மத்திய அரசு வக்கீல்  சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.  இதை கேட்ட நீதிபதிகள் தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில்  ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2008ம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி, இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் பெயர் பட்டியலில் ஒட்டகம் இல்லை. ஆனால், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்துக்கு பல ஒட்டகங்கள் இறைச்சிக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து, மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, இறைச்சிக்காக ஒட்டகங்கள் வெட்ட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு கடந்த ஜூலை மாதம் தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர்  அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு இறுதி கால அவகாசம் அளிக்கிறோம்.  இதை  மீறினால் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை இணை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரிக்கை செய்கிறோம். மத்திய, மாநில அரசுகள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1. ஒட்டகங்கள் வெட்ட அனுமதி உள்ளதா? 2. அவ்வாறு வெட்ட அனுமதி இருந்தால் எந்த வழிமுறைகளை கொண்டு வெட்டப்படுகிறது. 3. தமிழ்நாட்டில் ஒட்டகம் இல்லாத போது எவ்வாறு, எந்த விதத்தில் வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது.  4. சென்னை மாநகராட்சி சட்டத்தின் அடிப்படையிலும், மத்திய விலங்குகள் வதை தடுப்பு சட்டத்திற்கு உட்பட்டு எந்த இடங்களில் வெட்டப்படுகிறது.
அவ்வாறு ஒட்டகங்கள் வெட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து, இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன் ஆஜராகி, ‘மத்திய அரசின் சட்டப்படி வசதி இல்லாத இடங்களில் ஒட்டகம் வெட்ட அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட வசதிகள் இல்லை. இந்த வழக்கின் இறுதி விசாரணையில்தான் இதுபற்றி முடிவு எடுக்க முடியும்’ என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள்,  தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட அனுமதிக்க முடியாது. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் விரிவாக பதில் அளிக்க வேண்டும். வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 17ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

Categories: NEWS
%d bloggers like this: