Home > DISTRICT-NEWS, Perambalur > வி.களத்தூர் பகுதி கடைகளில் சோதனை ரூ.30,000 மதிப்புள்ள காலாவதி பொருட்கள் கைப்பற்றி அழிப்பு

வி.களத்தூர் பகுதி கடைகளில் சோதனை ரூ.30,000 மதிப்புள்ள காலாவதி பொருட்கள் கைப்பற்றி அழிப்பு

19,August, 2016

பெரம்பலூர் : வி.களத்தூரில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான, கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் ஊராட்சி பகுதி மற்றும் வண்ணாரம்பூண்டி பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பெரம்பலூர் சின்னமுத்து (நகர்ப்புறம்), லட்சுமண பெருமாள் (ஊரகம்), வேப்பூர் அழகுவேல், வேப்பந்தட்டை ரத்தினம், ஆலத்தூர் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் ரசாயன குளிர்பானங்களில் 50க்கும் மேற்பட்ட காலாவதியான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. போலியான டீத்தூள் பாக்கெட், தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதிகள் குறிப்பிடாத, உற்பத்தி செய்யப்பட்ட முகவரியற்ற, தடை செய்யப்பட்ட பாக்கெட் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட காலாவதியான, கலப்படமான பொருட்கள் அனைத்தும், அந்தந்த கடைகளின் முன்பே கொட்டி அழிக்கப்பட்டன. பின்னர் சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், நகரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்வோர் மீது உணவு பாதுகாப்புத்துறை சார்ந்த சட்ட பிரிவுகளின்கீழ் நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பெரம்பலூர் வி.களத்தூரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்து, காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Perambalur
%d bloggers like this: