Home > DISTRICT-NEWS, Kanniyakumari > திறந்தவெளியில் உணவு தயாரிப்பு- சுகாதார குறைபாடுஉணவு பாதுகாப்பு விதிகளை கண்டுகொள்ளாத ஓட்டல்கள்

திறந்தவெளியில் உணவு தயாரிப்பு- சுகாதார குறைபாடுஉணவு பாதுகாப்பு விதிகளை கண்டுகொள்ளாத ஓட்டல்கள்

29,August, 2016

நாகர்கோவில் : அனைவருக்கும் சீரான தரமான இலவச கல்வி, உயர்  மருத்துவம், சுகாதாரமான உணவு இவையே வளர்ந்த நாடுகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் இதற்கான சட்டங்கள் இருந்தாலும், அவை நடைமுறைப்படுத்தப் படாமல் உள்ளன.  காசு கொடுத்தாலும்  தரமான உணவில்லை. எனவே கடந்த 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2011ல் இந்த சட்டத்தை அமல்படுத்த உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஏற்படுத்தப்பட்டது.  வட்டம் வாரியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், அவர்களை வழி நடத்த மாவட்டங்களில் துணை சுகாதாரத்துறை இயக்குநரும் நியமிக்கப்பட்டனர்.  தலைச்சுமை வியாபாரி  முதல் உணவு சம்பந்தப்பட்ட பெரிய வணிக நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் உணவு பாதுகாப்புத்துறை அனுமதி பெற உத்தரவிடப்பட்டது.
குமரியில் அங்கன்வாடிகள், ரேஷன் கடைகள், அரசு நிறுவனங்கள் உள்பட 9 ஆயிரம் நிறுவனங்கள் இதில் பதிவு பெற்றுள்ளன. இவர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 5 ஆண்டுகள் கால நிர்ணயமும் செய்யப்பட்டது. தற்போது 5 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையிலும் இந்த சட்ட விதிகளை துறை நடவடிக்கைக்கு உள்ளான ஒரு சில பெரிய நிறுவனங்களை தவிர இதர ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் உணவுபொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. குறிப்பாக கலப்பட மசால் பொருட்கள், தண்ணீர் கேன் மற்றும் பாக்கெட் விற்பனை, திறந்தவெளியில்  உணவு தயாரிப்பு மற்றும் பண்டங்கள் விற்பனை, தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களின் சேர்க்கை என அத்துமீறல்கள் தொடர்ந்தபடியே உள்ளன. எப்போதாவது உணவு பாயகாப்புத்துறை அதிகாரிகள் சுகாதாரமற்ற  உணவு பொருட்களை கைப்பற்றி அழித்தாலும், சில மணி நேரங்களிலேயே மீண்டும் அதே தவறை செய்யத் தொடங்கி விடுகின்றனர். இதனால் வழக்கம்போல் இந்த சட்டமும் கொண்டு வந்து  எவ்வித பலனும் இல்லாத நிலையே உள்ளது.
இதற் கடையே இத்துறைக்கு புதிய இயக்குநராக  பொறுப்பேற்றுள்ள அமுதா அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதன்படி பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் 3 மாதங்கள் இச்சட்டம், அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள், வியாபாரிகள் சங்கம், பேக்கரி (அடுமனை) பொருட்கள் தயாரிப்பாளர்கள் கூட்டம் போன்றவற்றை நடத்த வேண்டும். பின்னர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாகரனிடம் கேட்டபோது, புதிய இயக்குநர் உத்தரவுப்படி, முதலில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் உணவு பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுக்கு நடத்த உத்தரவிட்டுள்ளோம். இதன்படி முதலில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.மேலும் பள்ளி, கல்லூரி அருகே போதை சாக்லெட் விற்பனை, புகையிலை விற்பனையை கட்டுப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குமரியில் நான் பொறுப்பேற்ற பின்னர் 40 உணவு மற்றும் பொட்டல பொருட்கள் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சோதனையில் 5 தரமற்ற பொருட்கள் விற்பனையும், ஒரு பாதுகாப்பற்ற உணவு விற்பனையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
டாஸ்மாக் பாருக்கு உரிமம்
அரசு பள்ளிகள், அங்கன்வாடிகள் உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெற்றிருந்தாலும் டாஸ்மாக் பார்கள் இதுவரை இந்த அனுமதி வரம்பில் வரவில்லை.  டாஸ்மாக் பார்களில் உணவு தயாரிப்பதால் இனி பாருக்கும் உரிமை பெற வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது.
பரோட்டா, பன்னில் சோ்ப்பு அஜினோ மோட்டோ சுவையூட்டியாக புரோட்டா உள்பட பல்வேறு தின்பண்டங்களில் சேர்க்கப்படுகிறது. இதிலுள்ள மேனோசோடியம் குளுக்கோமேட் எனும் ரசாயனம்  மூளையின் செயல்பாட்டை பாதிக்கும். மேலும் போதைப்பொருள் போல மீண்டும் மீண்டும் இந்த ரசாயனயம் கலந்த உணவு பண்டங்களை உண்ண  தூண்டும்.
* இதேபோல் சோடியம் பை சல்பேட் எனப்படும் ரசாயனம் பிஸ்கட் மற்றும் பன்களில் மென்மைக்காக சேர்க்கப்படுகிறது. இதனால் இருதய பாதிப்புகள் வரும் என்பதால் பல நாடுகளில் இவை தடைசெய்யப்பட்டு விட்டன. தற்போது இந்தியாவில் பிரபல நிறுவனங்கள் இதனை பயன்படுத்துவதில்லை. ஆனால் உள்ளூர் பேக்கரிகளில் இதன் சேர்க்கை உள்ளது. எனவே இதனை பயன்படுத்தக்கூடாது என பேக்கரி மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் கூட்டம் நடத்தி அறிவுறுத்த உள்ளதாக கருணாகரன் கூறினார்.
10 லட்சம் அபராதம்
* பொட்டல உணவு பொருட்களில், பொருளின் பெயர்,  தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, சேர்மானம், எப்.எஸ்.எஸ்.ஐ அனுமதி பெற்றதற்கான முத்திரை, அதிகபட்ச விற்பனை விலை போன்ற அனைத்து விபரங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இருமுறை எச்சரிக்கை நோட்டீசும், சரிசெய்யாவிட்டால்  மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றத்தில் 3 மாத விசாரணைக்கு பின் அபராதம் விதிக்கப்படும்.
* பாதுகாப்பற்ற உணவுகளுக்கு நேரடியாக நீதிமன்ற நடவடிக்கை. இதில் ₹3 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம். 6 மாத சிறை மற்றும் நிறுவனம் சீல்வைப்பு தண்டனையாகும்.
* உணவால் உயிர் இழப்பு ஏற்பட்டால் உடனடி சீல்வைப்பு. ₹10 லட்சம் அபராதம். நிறுவனம் சீல்வைப்பு தண்டனையாகும்.
உணவு விடுதிகளுக்கு விதிமுறை
* உணவு தயாரிக்கும் இடம் வெள்ளையடித்து ஒட்டடை இருக்க கூடாது.
* கை கழுவும் இடம் சுத்தமாக இருப்பதுடன், அங்கு சோப்பு அல்லது சோப்பு திரவம் இருக்க வேண்டும்.
* தண்ணீர் காய்ச்சி ஆறவைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது ஆர்.ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்க வேண்டும்.  
* ஊழியர்கள் நகம் வெட்டி, தலையில் முடி உதிராதபடி உறை அணிந்திருக்க வேண்டும்.  
* சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்த உடன் கைகளை கழுவ வேண்டும்.
* பழச்சுளைகள் மற்றும் வடை, பஜ்ஜி போன்றவற்றை  ஈ மொய்க்கும் படியோ, பிறர் கைகளால் தொட்டு பார்க்காதபடி, தூசிகள் படாதபடி மூடி வைக்க வேண்டும்.
* புரோட்டா, தோசை போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தும் அடுப்பு, தோசைக்கல்  சாலையோரம் தூசி மற்றும் அசுத்தமான தண்ணீர்படும் வகையில் அமைக்க கூடாது. கண்ணாடி அல்லது காட்போர்டு மூலம் மறைத்திருக்க வேண்டும்.
*  ஹோட்டல் பணியாளர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ சான்று அவசியம். ஜலதோஷம் போன்றவை இருந்தால் கண்டிப்பாக பணியில் இருக்க கூடாது.
*  உணவு விடுதிகளில் கழிவறைகள் இருந்தால் அதன் வாசல் வெளிப்புறமாக இருப்பதுடன், சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பைகளில் பார்சல்
ஓட்டல்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் சர்பத், ஜூஸ் மட்டுமின்றி டீ, காபி, கொதிக்கும் குழம்பு வகைகள் பாலித்தீன் பைகளில் வாங்கி செல்வது தற்போது சர்வசாதாரணமாகி விட்டது. இதிலும் ரசாயன மாற்றம் ஏற்பட்டு உணவு விஷமாகி உடல்நலம் கெடவும், புற்றுநோய், வயிற்று வலி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. எனவே முன்பு போல் பாத்திரங்களில் பார்சல் வாங்குவது நல்லது. மேலும் சிலர் பாலித்தீன் கவரை திறக்க வாயால் ஊதுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்டவரிடம் நோய் கிருமிகள் இருந்தால் அவை காற்றுடன் பாலிதீன் பையில் சேருகிறது. சிலர் தோசை, வடை போன்ற உணவு பொருட்களை பொதிந்து தர பாலித்தீன் பேப்பரை தனியாக பிரிக்க நாவில் எச்சிலை தொட்டு தரும் பழக்கம் வைத்துள்ளனர். எனவே அதனையும் கவனித்து வாங்க வேண்டும்.

%d bloggers like this: