Home > DISTRICT-NEWS, Nagapattinam > சமையல் வேலை செய்பவர்களும் தர நிர்ணய சான்று பெற வேண்டும் விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரி வலியுறுத்தல்

சமையல் வேலை செய்பவர்களும் தர நிர்ணய சான்று பெற வேண்டும் விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரி வலியுறுத்தல்

20,September, 2016

நாகை : சமையல் வேலை செய்பவர்களும் தர நிர்ணய சான்று பெற வேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரி வலியுறுத்தினார்.
மயிலாடுதுறையில்  உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பற்றிய  விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. வர்த்தகர் சங்க செயலாளர்  செந்தில்வேல் வரவேற்றார். தர நிர்ணய சட்டம் குறித்து மயிலாடுதுறை நகராட்சி  உணவு பாதுகாப்பு அலுவலர் முத்தையன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன்,  தவபாலன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர்  தட்சிணாமூர்த்தி பேசியதாவது: சமையல் வேலை செய்பவர்களும் தர நிர்ணய சான்று பெற வேண்டும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன்படி உணவு  விற்பனையாளர்கள் உணவு விற்பனை செய்வதற்கான உரிமம், பதிவு சான்று  பெறுவதற்கான காலக்கெடு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.  எனவே உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ள டீ, காபி, பலகார கடை, ஓட்டல், பேக்கரி,  ஸ்வீட், காய்கறி கடை, ஆடு, மாடு, கோழி கறி விற்பனையாளர், மீன் விற்பனை  செய்வோர், சாலையோர உணவு விற்பனையாளர், திருமண மண்டபங்கள், சமையல் தொழில் செய்வோர், அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் தயாரிப்பவர்கள், சத்துணவு, ஊட்டச்சத்து மையங்கள், ரேஷன் கடைகள், அன்னதாக மையங்கள், மொத்த விற்பனை ஏஜென்சிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள், தனிநபர்கள் நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்குள் உணவு விற்பனை செய்பவர்கள் ரூ.100, அதற்குமேல் விற்பனை செய்வோர் ரூ.2 ஆயிரத்தை  கருவூலத்தில் செலுத்தி புகைப்படம், அடையாள அட்டை நகல், தேவையான ஆவணங்களுடன்  தாங்களே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது உணவு பாதுகாப்பு அலுவலகத்தை  தொடர்பு கொள்ளலாம். ஓட்டல்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். மளிகை  கடைகளில் தயாரிப்பு விவரம் இல்லாத பொருட்களையோ, காலாவதியான பொருட்களையோ  விற்பனை செய்யக்கூடாது என்றார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள்  செந்தில்குமார், மகாராஜன், சீனிவாசன், சேகர் கலந்து கொண்டனர். வணிகர் சங்க  பேரமைப்பு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

%d bloggers like this: