Home > Coimbatore, DISTRICT-NEWS > இரு மாதங்களில் 48 உணவு மாதிரிகள் சேகரிப்பு இனிப்புகளின் தரம் ஆய்வு

இரு மாதங்களில் 48 உணவு மாதிரிகள் சேகரிப்பு இனிப்புகளின் தரம் ஆய்வு

1,October, 2016

கோவை: கடந்த இரு மாதங்களில் உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த புகார்களின் அடிப்படையில், 48 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

தீபாவளி பண்டிகைக்கு ஆடைகள், இனிப்பு வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இன்றைய அவசர உலகில் பொதுமக்களுக்கு வீடுகளில் இனிப்பு வகைகளை தயாரிக்க பொறுமை, நேரம் இருப்பதில்லை. அனைத்திலும், ‘ரெடிமேட்’ யுகமாக மாறிவிட்ட நிலையில், ‘ஸ்வீட் ஸ்டால்’கள் பொதுமக்களின் தேர்வாக உள்ளது. இந்நிலையில், இவ்வகை இனிப்பு வகைகளின் தரம் குறித்து புகார்கள் கூறப்படுகின்றன.

இதையடுத்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில், கடந்த இரு மாதங்களாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வில் கடந்த மாதம், 28 மாதிரிகளும், இம்மாதம் இதுவரை, 20 மாதிரிகளும் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை உணவுப்

பிரிவு நியமன அலுவலர் விஜய் கூறியதாவது:

இனிப்புகளில் அனுமதிக்கப்பட்ட நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இனிப்புகள் தயாரிக்க வனஸ்பதி, நெய் பயன்படுத்தினால், அதுகுறித்த விபரங்களை தெளிவாக கடையில் அனைவருக்கும் தெரியுமாறு எழுதி வைக்க வேண்டும். பால் சேர்த்த இனிப்பு வகைகளை மூன்று நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கக் கூடாது. அடைக்கப்பட்ட எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற எண்ணெய்களை பயன்படுத்தக் கூடாது. மேலும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மீண்டும் உபயோகிக்கக் கூடாது.

இனிப்பு வகைகள் தயாரிக்க உதவும் கடலைமாவு உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். பெங்காலி வகை இனிப்புகளை தனியாக வைப்பதுடன் அதுகுறித்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இனிப்புகளை மூட, உணவுக்கு பயன்படும் சில்வர் பாய்ல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கடந்த இரு மாதங்களில் ஸ்வீட், உணவுப் பொருட்கள் தரம் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. எண்ணெய் கடைகள், இனிப்பகங்கள் என, அனைத்து தரப்பு உணவு தயாரிப்பு நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த, 48 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS
%d bloggers like this: