Home > NEWS > கேள்விக்குறியாகும் உணவுப் பொருள்களின் தரம்

கேள்விக்குறியாகும் உணவுப் பொருள்களின் தரம்

5,October, 2016

மாநில பகுப்பாய்வுக் கூடங்களில் 70 சதவீதப் பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், 400-க்கும் மேற்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அலுவலக வசதி இல்லாததாலும், உணவுப் பொருள்களின் தரத்தை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் தரத்தைக் கண்காணிக்க, 32 மாவட்டங்களுக்கும் மாவட்ட நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, 585 உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் மட்டும் 199 அலுவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நுகர்வோரின் பயன்பாட்டுக்காக வரும் அனைத்து வகை உணவுப் பொருள்களின் விற்பனையைப் பதிவு செய்து, அதற்கு உரிமம் வழங்குவதே உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் முக்கியப் பணி. மேலும், கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்தல், தடை செய்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதுகாப்பான உணவு விற்பனை குறித்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தும் பணியிலும் ஈடுபடுகின்றனர்.
உணவுப் பொருள் தயாரிப்புக் கூடங்கள், விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், சேகரிக்கப்பட்ட மாதிரியை சென்னை, கோவை, சேலம், தஞ்சை, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள மாநில பகுப்பாய்வுக் கூடங்களுக்கு அனுப்புகின்றனர். இந்த ஆய்வுக் கூடங்களின் மூலம் கண்டறியப்பட்ட முடிவுகள் 14 நாள்களுக்குள்ளாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்படும்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் "கேன்’ குடிநீர் நிறுவனங்கள் புற்றீசல் போல முளைத்துவிட்டன. அந்தக் குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு 64 வகையான சோதனைகள் நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் முறையான ஆய்வுக்கு உள்படுத்தப்படுவதில்லை.
இதேபோல, உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பொருளாக எண்ணெய் உள்ளது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், தவிட்டு எண்ணெய், பருத்திக் கொட்டை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் எனத் தரம் பார்த்து வாங்கப்படும் எண்ணெய் வகைகளிலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மோசடி நடைபெற்று வருவதாக உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பாமாயிலுடன் செயற்கையான சாற்றை (சின்தெடிக் எசன்ஸ்) கலந்து பல வகையான எண்ணெயாக மாற்றுகின்றனர். இதை அறியாத பொதுமக்கள், பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படும் அந்த எண்ணெயை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். பெரு நகரங்களில் உள்ள நட்சத்திர உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்தப்படும் எண்ணெய், அதன்பின்னர் லிட்டர் ரூ. 15 விலையில் வெளியே விற்பனை செய்யப்படுகிறது. அதைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், சமையல் எண்ணெயாகவும், தீப எண்ணெயாகவும் மாற்றி ரூ. 60 விலையில் விற்பனை செய்கின்றனர்.
பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பாலின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு, யூரியா, கொழுப்புச் சத்து, திடச் சத்து, தூசி, துரும்பு உள்பட 6 வகையான சோதனைகள் நடத்தப்படும். மாநிலப் பகுப்பாய்வுக் கூடங்களில் நடத்தப்படும் சோதனையில், ரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்பட்ட பாலாக இருந்தால், இங்கு துல்லியமான முடிவுகளைப் பெற முடியாது.
இதனால், காசியாபாத், புணே, மைசூரு, கொல்கத்தா நகரங்களில் மட்டுமே அமைந்துள்ள மத்திய பகுப்பாய்வுக் கூடங்களுக்கு அனுப்பினால் மட்டுமே துல்லியமான ஆய்வு முடிவுகளைப் பெற முடியும் நிலை உள்ளது.
இதுபோன்ற சூழலில், பகுப்பாய்வுக் கூடங்களில் 70 சதவீதப் பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஆய்வு முடிவுகளைப் பெறுவதிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்றார் அவர்.
அலுவலக வசதி இல்லை: பிற மாநிலங்களைவிடக் கூடுதலான உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், 400-க்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு அலுவலக வசதி இல்லை. இதேபோல, உதவியாளர்களும் இல்லாத நிலை உள்ளது. இதனால், ஆய்வுக்கு எடுக்கப்பட்ட மாதிரிகளையும், அலுவலகக் கோப்புகளையும் வைப்பதற்கு இடமில்லாமல் வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
ஆய்வுப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு அலுவலக வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே உணவுப் பாதுகாப்பு அலுவலர்களின் கோரிக்கையாக உள்ளது.
சுகாதார மேம்பாட்டுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யும் மத்திய, மாநில அரசுகள், சுகாதாரத்துக்கு அடிப்படையாக உள்ள உணவுப் பொருள்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Categories: NEWS
%d bloggers like this: