Home > DISTRICT-NEWS, Salem > தீபாவளிக்கு திடீர் பலகார கடைகள்: ஆய்வு செய்ய 7 குழுக்கள் நியமனம்

தீபாவளிக்கு திடீர் பலகார கடைகள்: ஆய்வு செய்ய 7 குழுக்கள் நியமனம்

7,October, 2016

சேலம்: சேலம் மாவட்டத்தில், தீபாவளி பலகார கடைகள் மற்றும் உற்பத்தி செய்யும் இடங்களை ஆய்வு செய்ய, உணவு பாதுகாப்பு துறை மூலம், ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு, அனைத்து தரப்பினரும், இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்குவதால், அனைத்து கடைகள் மட்டுமின்றி, தற்காலிக தயாரிப்பு கடைகள், ஏராளமாக உருவெடுக்கும். உதாரணமாக, திருமண மண்டபம், குடோன்கள் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து, கார மற்றும் இனிப்பு வகைகள் செய்ய தொடங்குவது வழக்கம். அவற்றை ஆய்வு செய்ய, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகம் மூலம், ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்கு காரம் மற்றும் இனிப்புகள் செய்வோர், கலப்பட எண்ணெயில் தயாரிப்பது, சுகாதாரமற்ற இடங்களில் தயாரிப்பது, ஈக்கள் மொய்க்க விடுவது, தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் விற்பது உள்ளிட்டவற்றை, முழுமையாக தவிர்க்க வேண்டும். அவற்றை ஆய்வு செய்ய, ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், குழுவுக்கு நான்கு பேர் வீதம், 28 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் ஆய்வின்போது சுகாதாரமற்ற சூழல் நிலவும்பட்சத்தில், அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Salem
%d bloggers like this: