Home > DISTRICT-NEWS, Tiruppur > தீபாவளிக்கு இனிப்பு, கார வகைகளை தரமாக தயாரித்து விற்க வேண்டும்

தீபாவளிக்கு இனிப்பு, கார வகைகளை தரமாக தயாரித்து விற்க வேண்டும்

12,October, 2016

திருப்பூர், : தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, கார வகைகளை தரமாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்யப்படும் இடங்களான பேக்கரி, ஓட்டல், சில்லறை கடைகள், திருமண மண்டபம் மற்றும் மற்ற பகுதிகள் சுத்தமாக இருக்க வேண்டும்.
இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்ய பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான மைதா, நெய், எண்ணெய், சர்க்கரை, டால்டா உள்ளிட்டவை தரமானதாக இருக்க வேண்டும்.
மேலும், இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்ய பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் பொட்டலம் மற்றும் டின்கள் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர்களின் முழு முகவரி, பேட்ச் எண் ஆகிய விவரங்கள் அடங்கிய லேபிள் இடம் பெற்று இருக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த எண்ணெய் வகைகளை மறுமுறை உபயோகிக்கக்கூடாது.
விற்பனை செய்யப்படும் அனைத்து இனிப்பு மற்றும் கார வகைகளின் பொட்டலங்களின் மீது தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர்களின் முழு முகவரி கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். தரமற்ற முறையில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்வது கண்டறியப்பட்டால் உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

Categories: DISTRICT-NEWS, Tiruppur
%d bloggers like this: