Home > Cuddalore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு துறை விழிப்புணர்வு கூட்டம்

உணவு பாதுகாப்பு துறை விழிப்புணர்வு கூட்டம்

20,October, 2016

imggallery

சிதம்பரம்: தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு காரம் தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. கடலுார் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பகங்கள், பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் தொழில் புரிவோர்களுக்கான உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தெற்கு வீதி மான்ஸ்ரோ மினி அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட அதிகாரி டாக்டர் ரவி தலைமை தாங்கினார். சிதம்பரம் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் பத்மநாபன் வரவேற்றார். உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் நல்லதம்பி, ரவிச்சந்திரன், அருண்மொழி, குணசேகரன் மற்றும் இனிப்பு தயாரிப்பாளர்கள் தரப்பில் ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் கணேஷ், நகர வர்த்தக சங்க பொருளாளர் முரளிதரன் மற்றும் சிதம்பரம், அண்ணாமலை நகர் ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இனிப்பு கார வகைகளை தரமான பொருட்களைக் கொண்டு தயார் செய்ய வேண்டும். சுத்தமான நீர் மற்றும் எண்ணெய் மூலம் மட்டுமே தயாரிக்க வேண்டும். இனிப்பு வகைகளில் செயற்கை கலர் போதுமான அளவு மட்டுமே சேர்க்க வேண்டும். ஆய்வின் போது கூடுதலாக இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு தயாரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் சுத்தமாகவும், தலையில் கவசம், கையில் உறை அணிந்து செய்ய வேண்டும். ஒரு முறை மட்டுமே எண்ணெயை பயன்படுத்த வேண்டும். இனிப்பு கார வகை பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, பயன்பாட்டு காலம், முகவரி, அளவு, சைவமா, அசைவமா குறியீடு, மூலப்பொருள்களின் குறியீடு, விலை போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் இல்லாத பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப்படும். காலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு அதிகாரி டாக்டர் ரவி தெரிவித்தார்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS
%d bloggers like this: